கோலாலம்பூர்: இம்மாதத் தொடக்கத்தில் மலேசியாவின் சிலாங்கூர் மாநிலச் சிறையிலிருந்து தப்பி ஓடிய பாகிஸ்தானியக் கைதியைக் காவல்துறை கண்டுபிடித்துக் கைது செய்துள்ளது.
முஹம்மது ஹசன் என அடையாளம் காணப்பட்ட அந்த 24 வயதுக் கைதி, சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பித்த பின்னர், காடுகளில் ஒளிந்து திரிந்ததும் இரவு நேரத்தில் கட்டுமானப் பகுதிகளுக்குள் பதுங்கி இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவரைத் தேடும் முயற்சிக்குப் பாகிஸ்தான் தூதரகம் உதவியது. தூதரகத்திடமிருந்து கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில், ஆறு நாள்களாகத் தேடுதல் தீவிரமடைந்தது என்றும் அதன் விளைவாக கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 18) மாலை 5 மணியளவில் அந்தக் கைதி சிக்கினார் என்றும் மலேசியக் குடிநுழைவுத் துறைத் தலைமை இயக்குநர் ஜக்காரியா ஷாபான் கூறினார்.
அதிகாரிகளிடம் பிடிபடாமல் இருக்க, சந்தேக நபர் கட்டுமானப் பகுதியிலிருந்து திருடிய ஆடைகளை அணிந்திருந்ததாக, ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஏழு நாள்களுக்கு முன்னர், காவல்துறை வாகனத்திலிருந்து சிறைச்சாலைக்குள் இறக்கிவிடப்பட்டபோது அந்தக் கைதி தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

