சோல்: தென்கொரியத் தலைநகர் சோல் முழுவதும் விளம்பரப் பதாகைகளில் (billboards), பல ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி அலைகளால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்த ஃபுக்குஷிமா பகுதியை விளம்பரப்படுத்தும் காணொளி திரையிடப்பட்டது.
ஜப்பானில் அமைந்துள்ள ஃபுக்குஷிமாவில் 2011ஆம் ஆண்டு நிகழ்ந்த அணுசக்தி விபத்துக்குப் பிறகு இப்போதுதான் தென்கொரியாவின் அவ்வட்டாரம் விளம்பரப்படுத்தப்படுவதாக ஜப்பானிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த 30 வினாடி விளம்பரத்தை ஜப்பானின் மறுகட்டமைப்பு அமைப்பு (Reconstruction Agency) தயாரித்தது. அந்த அமைப்பு, 2011ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்துக்குப் பிறகு நிலைமையைக் கையாளும் பொறுப்பைக் கொண்டுள்ளது.
‘15 ஆண்டுகளாக மீண்டு வந்த பிறகு இப்போது ஃபுக்குஷிமாவுக்கு வருகை தரும் நேரம் வந்துவிட்டது,” என்ற விளம்பரக் குறிப்பைக் கொண்டுள்ளது அந்தக் காணொளி. காணொளியில் பல்வேறு பிரபலமான இடங்கள் காண்பிக்கப்படுகின்றன.
2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி ஃபுக்குஷிமா பேரிடர் நிகழ்ந்தது. வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி பேரலைகள் தாக்கியதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அதனையடுத்து ஃபுக்குஷிமா அணுசக்தி ஆலையில் விபத்து நிகழ்ந்தது.
சென்ற ஆண்டு 9.4 மில்லியனுக்கும் அதிகமான தென்கொரியர்கள் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டனர். அவர்களில் ஆக அதிகமானோர் தென்கொரியர்கள் என்று அதிகாரபூர்வ ஜப்பானியப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

