பயணிகளுக்குப் பணம் முழுமையாகத் திருப்பிக் கொடுக்கப்படும்: மலேசியப் போக்குவரத்து அமைச்சர்

பயணிகளுக்குப் பணம் முழுமையாகத் திருப்பிக் கொடுக்கப்படும்: மலேசியப் போக்குவரத்து அமைச்சர்

2 mins read
038989c8-4ece-41e0-a093-2c23afc50705
விமானப் பொறியாளர், இயந்திரப் பாகங்கள் பற்றாக்குறையால் அண்மையில் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானச் சேவைகளில் தடைகள் ஏற்பட்டதாகத் திரு அந்தோணி லோக் கூறினார்.  - படம்: தி ஸ்டார்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: ஐந்து மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேல் தாமதமாகும் விமானங்களில் உள்ள பயணிகளுக்கு செப்டம்பர் 2ஆம் தேதிமுதல், விமான நிறுவனங்கள் கட்டாயமாக முழுப் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறியிருக்கிறார்.

மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மலேசிய விமானப் போக்குவரத்துப் பயணிகள் பாதுகாப்புக் கோட்பாட்டுக்குச் செய்யப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, அண்மைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் திரு லோக் தெரிவித்தார்.

தாமதமான விமானத்தில் தொடர்ந்து பயணம் செய்யாமல், வேறொரு விமானத்திற்கான நுழைவுச்சீட்டை வாங்கும் பயணிகளுக்கு இது பொருந்தும் என்றும் அவர் விளக்கினார்.

“இது பயனீட்டாளர்களுக்குச் செய்யப்படும் ஒரு மேம்பாடு. இதற்கு முன்னர் அத்தகைய ஏற்பாடுகள் எதுவும் இருந்ததில்லை. விமான நிறுவனங்கள் உணவு போன்றவற்றை மட்டுமே கொடுக்க வேண்டியிருந்தது,” என்று திரு லோக் கூறினார்.

பயணிகள் தொடக்கத்தில் பணம் செலுத்திய முறையின்படியே பணம் மீண்டும் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாறும் வானிலை போன்ற வழக்கத்துக்கு மாறான சூழ்நிலைகளால் தடைப்படும் விமானங்களின் பயணிகளுக்குப் பணம் திருப்பிக் கொடுக்கப்படுவதும் மாற்றங்களில் அடங்கும்.

இதற்கிடையே, விமானப் பொறியாளர்களிலும், இயந்திரப் பாகங்களிலும் உள்ள பற்றாக்குறையால் அண்மையில் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானச் சேவைகளில் தடைகள் ஏற்பட்டதாக திரு லோக் கூறியிருக்கிறார்.

மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நடத்திய தணிக்கையில், மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தகுதிபெற்ற 411 பொறியாளர்களில் 63 பேர் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பதவி விலகியிருப்பதாகக் கண்டறியப்பட்டது.

மற்ற பராமரிப்பு நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் மேம்பட்ட சம்பளத் தொகுப்புகளே அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆணையம் கண்டுபிடித்ததாகத் திரு லோக் கூறினார்.

இந்நிலையில், மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், மலேசிய ஏர்லைன்ஸ் ஆகாய நிறுவனத்தின் சான்றிதழை மூவாண்டுகளிலிருந்து ஒராண்டுக்குக் குறைத்துள்ளது.

மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமம், தனது விமானப் பயணங்களையும் பயணப் பாதைகளையும் தற்காலிகமாக இவ்வாண்டு டிசம்பர் வரை குறைக்கத் திட்டமிடுவதாகத் தெரிவித்தது.

இம்மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட சேவைத் தடைகளைத் தொடர்ந்து, அண்மைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஆணையம் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தும் தீவிரத் திட்டத்தை உள்ளடக்கும் துயர்தணிப்புத் திட்டத்தை மலேசிய ஏர்லைன்ஸ் தயார்ப்படுத்தி இருப்பதாகத் திரு லோக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
விமானப் போக்குவரத்துபணம்கோலாலம்பூர்