தங்காக்: மலேசியாவின் மத்திய அரசாங்கம், ஜோகூர் மாநிலத்திடமிருந்து பெற்ற வருமானத்தைவிட கூடுதல் நிதியை அம்மாநிலத்திற்கு ஒதுக்கியிருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
2023ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டுவரை ஜோகூர் மாநிலத்திடமிருந்து மத்திய அரசாங்கம் பெற்ற வருமானம் கிட்டத்தட்ட 14 பில்லியன் ரிங்கிட். மாறாக, பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசாங்கம் கடந்த மூவாண்டுகளில் 16 பில்லியன் ரிங்கிட் நிதியை ஜோகூர் மாநிலத்திற்கு வழங்கியதாகத் திரு அன்வார் கூறினார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சருமான திரு அன்வார், ஜோகூரின் மேம்பாட்டில் மத்திய அரசாங்கம் கொண்டுள்ள உறுதியை விவரிக்க அத்தகைய தகவல்களைப் பகிர்ந்துகொள்வது அவசியம் என்று வலியுறுத்தினார்.
முன்னாள் அரசாங்கத்தின்கீழ் ஜோகூர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட நிதியையும் தற்போதைய மடானி அரசாங்கத்தின் நிதியையும் அவர் ஒப்பிட்டுப் பேசினார்.
முந்தைய அரசாங்கத்தின்கீழ், ஜோகூர் மாநிலம், ஒவ்வோர் ஆண்டும் 6லிருந்து 7 பில்லியன் ரிங்கிட் நிதியைப் பெற்றது என்ற அவர், மடானி அரசாங்கத்தின்கீழ் அந்த நிதி 8.7 பில்லியன் ரிங்கிட்டிற்கு அதிகரித்தது என்றார்.
ஜோகூர் மாநில மக்களின் முன்னேற்றத்திற்கும் நலனுக்கும் முன்னுரிமை அளிப்பதில் மத்திய அரசாங்கம் உறுதியாக இருப்பதை அந்த நிதி உயர்வு எடுத்துக்காட்டுகிறது என்றார் திரு அன்வார்.
திரு அன்வார் முன்வைத்த இவ்வாண்டுக்கான தகவல்களின்படி செயல்பாட்டுக்கும் மேம்பாட்டுக்கும் ஆக அதிகமான நிதியைப் பெறும் மூன்றாவது மாநிலம் ஜோகூர். சாபாவும் சரவாக்கும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
ஜோகூருக்கு ஒதுக்கப்பட்ட செயல்பாட்டு நிதி 2022ஆம் ஆண்டில் 7 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது. இவ்வாண்டு அது 8.7 பில்லியன் ரிங்கிட்டிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேம்பாட்டுக்கென ஒதுக்கப்பட்ட நிதி 2.3 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 4.8 பில்லியனுக்கும்மேல் உயர்த்தப்பட்டுள்ளது.

