கடும் வெப்பத்துக்குத் தீர்வுகாண நிதிதான் முக்கிய இடையூறு: 'யுஎன்இபி’

கடும் வெப்பத்துக்குத் தீர்வுகாண நிதிதான் முக்கிய இடையூறு: 'யுஎன்இபி’

படம்: ராய்ட்டர்ஸ்

27 Sep 2026 - 4:22 pm

2 mins read

எரிசக்தியைக் குறைவாகப் பயன்படுத்தும் குளிரூட்டிகள், சுற்றுச்சூழலைக் குளுமையாக வைக்கும் சாயம், அனல்காற்று வீசுவதற்கு முன்பு எச்சரிக்கை விடுக்கும் மறைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி வெகுவிரைவில் வெப்பமயமாகும் உலகில் நாடுகள் மக்களைப் பாதுகாக்கவேண்டும் என்பது ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் (ஐநா) விருப்பமாகும்.

நிதிப் பற்றாக்குறை

எனினும், வெப்பத்தைத் தணித்துக் குளிரூட்ட அதிக எரிசக்தியைப் பயன்படுத்தும் குளிரூட்டிகள்தான் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் விலை பொதுவாகக் குறைவாக இருப்பது காரணமாகும்.

அதனால்தான், மாற்றுத் தீர்வுகளுக்கு அரசாங்கங்கள் மட்டுமின்றி தனியார் துறையிலிருந்து நிதியுதவி வரவேண்டும் என்று ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் (யுஎன்இபி) பருவநிலை மாற்ற இயக்குநர் மார்ட்டின் கிராவ்ஸ் கூறியுள்ளார்.

“துர்திர்‌ஷ்டவசமாக (சுற்றுச்சூழலுக்கு) உதவாத சாதனங்கள்தான் பெரும்பாலான வேளைகளில் மலிவாக இருக்கின்றன. சந்தையில் அவை அதிகம் வாங்கப்படுவதற்கு அதுவே காரணமாகும். ஆனால், இந்தப் போக்கை மாற்றுவதற்கான வழியை நாம் கண்டுபிடிக்கவேண்டும்,” என்று செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுடன் நடந்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டார்.

“வெப்பத்தைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதைப் பொறுத்தவரை போதுமான நிதியுதவி இல்லாததே ஆகப்பெரிய சவாலாக இருக்கக்கூடும்,” என்றும் திரு கிராவ்ஸ் சுட்டினார்.

தென்கிழக்காசியாவில் சுற்றுச்சூழலுக்கு உதவாத குளிரூட்டிச் சாதனங்களின் பயன்பாடு கிட்டத்தட்ட 75 விழுக்காடு என அவர் தெரிவித்தார். தகுந்த தொழில்நுட்பம் நடப்பில் இருக்கிறது என்றும் அதேவேளை அவற்றைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் தேவைப்படுகின்றன என்றும் அவர் விவரித்தார்.

மற்ற தீர்வுகள்

குளிரூட்டும் சாதனங்களையும் தாண்டி வெப்பத்தை உள்வாங்காமல் அதை வெளியே செலுத்தும் சாயம், கட்டடங்களுக்கு வெப்பம் செலுத்தப்படுவதைக் குறைக்கும் கட்டுமானப் பொருள்கள் போன்ற தீர்வுகளுக்கும் நிதியுதவி தேவைப்படும் என்றும் திரு கிராவ்ஸ் குறிப்பிட்டார்.

யுஎன்இபியும் அனைத்துலக நிதி அமைப்பும் (International Finance Corporation) 2024ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, வளர்ந்துவரும் பொருளியல்களில் வெப்பத்தைத் தணிக்கும் தீர்வுகளுக்கான சந்தையின் மதிப்பு 2050க்குள் 300 பில்லியன் டாலரிலிருந்து (383 பில்லியன் வெள்ளி) குறைந்தது 600 பில்லியன் டாலருக்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக நடைபெற்ற உலகக் குளிரூட்டுப் பற்றுறுதிக் கூட்டத்தில் (Global Cooling Pledge Assembly) கலந்துகொள்ள திரு கிராவ்ஸ் சிங்கப்பூருக்கு வருகை தந்திருந்தார்.

பருவநிலை மாற்றம் தொடர்பான அக்கூட்டத்தில், எரிசக்தியைக் குறைவாகப் பயன்படுத்தும் முறைகளில் மிச்சமாகும் கரிமப் பயன்பாட்டை விற்பது போன்ற வழிமுறைகள் அதில் ஆராயப்பட்டன. சுவிட்சர்லாந்தும் கானாவும் அத்தகைய திட்டத்தைத் தங்களுக்கிடையே ஆராய்ந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்