வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் நாடுகளைக் குறி வைப்பதன் மூலம் ரஷ்யாமீதான நெருக்குதலை அதிகரிக்க ஜி7 நாடுகளின் நிதியமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர்.
உக்ரேன்மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை முன்னிட்டு ரஷ்யாவின் வருவாயைத் துண்டிக்க வரிகள், இறக்குமதி, ஏற்றுமதி தடைகள் ஆகிய வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியம் என்று ஜி7 நாடுகளின் நிதியமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.
ரஷ்யா எண்ணெய்யை வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகள்மீது தடைகளை விதிக்கும்படி அமெரிக்கா அதன் நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கிய சீனாமீது கூடுதல் வரிகளை விதிப்பதிலிருந்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பின்வாங்கியிருந்தாலும் அவரது நிர்வாகம் இந்தியாவைக் குறிவைத்து அதன்மீது கூடுதல் வரிகளை விதித்தது.
எனினும் புதன்கிழமை (அக்டோபர் 1) ஜி7 அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் சீனாவையோ இந்தியாவையோ குறிப்பிடவில்லை.
“உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் எண்ணெய் வாங்கும் நாடுகளை நாங்கள் குறிவைப்போம்,” என்று ஜி7 நாடுகள் குறிப்பிட்டனர்.
ரஷ்யாவிடமிருந்து வரும் இறக்குமதிகளை முழுமையாக நிறுத்தும் குறிக்கோளுடன் உறுதியான கட்டுப்பாடுகளை மேற்கொள்வோம் என்று அது கூறியது.
ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கி ஆதரவு தெரிவிக்கும் நாடுகள்மீது வர்த்தக கட்டுப்பாடுகளுடன் பிற கட்டுப்பாடுகளை விதிக்கவும் தீவிரமாக யோசித்துவருவதாக ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் எந்த நாட்டையும் குறிப்பிடவில்லை.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரேன்மீது ரஷ்யா முழுவீச்சில் போர் தொடுத்தது.
அதை முன்னிட்டு மேற்கத்திய வல்லரசுகள் ரஷ்யாமீது கடுமையான தடைகளை விதித்தன.