உக்ரேனுக்கு $68 பில்லியன் கடன் வழங்க ஒப்பந்தம்

2 mins read
முடக்கப்பட்ட ரஷ்யச் சொத்துகளைப் பயன்படுத்திக் கடன் வழங்க ஜி-7 தலைவர்கள் இணக்கம்
5f7bbb29-1bee-4307-a340-1e6e1d6266d5
உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (இடம்), அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் ஜூன் 13ஆம் தேதி ஜி-7 உச்ச நிலை மாநாட்டிற்கு இடையே இருதரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். - படம்: ஏஎஃப்பி

இத்தாலி: ஜி-7 நாடுகளின் தலைவர்கள், முடக்கப்பட்ட ரஷ்யச் சொத்துகளிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையைப் பயன்படுத்தி உக்ரேனுக்கு 50 பில்லியன் அமெரிக்க டாலர் (S$68 பில்லியன்) கடன் வழங்குவது தொடர்பில் ஜூன் 13ஆம் தேதி இணக்கம் கண்டுள்ளனர்.

இத்தாலியில் நடைபெறும் ஜி-7 உச்சநிலை மாநாட்டின் தொடக்க நாளில் இவ்வாறு இணக்கம் காணப்பட்டது.

2022ஆம் ஆண்டு மாஸ்கோ, உக்ரேன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து ரஷ்ய அரசுக்குச் சொந்தமான சொத்துகளை ஜி-7 அமைப்பு முடக்கியது.

வருடாந்தர ஜி-7 உச்சநிலை மாநாட்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கலந்துகொண்டார்.

ஜி-7 நாடுகளின் தலைவர்களில் பெரும்பாலோர் அவரவர் நாட்டில் சவால்களை எதிர்கொள்ளும் நிலையிலும் உலக அரங்கில் மாற்றத்தைக் கொண்டுவருவதில் உறுதியாக இருந்தனர்.

சீனாவின் பொருளியல் திட்டங்களுக்குப் பதில் நடவடிக்கை மேற்கொள்வதிலும் அவர்கள் கவனம் செலுத்தினர்.

“செய்ய வேண்டியவை அதிகம் இருந்தாலும் இந்த மாநாட்டில் நடைபெறும் கலந்துரையாடல்கள் உறுதியான முடிவெடுக்க உதவும் என்று நம்புகிறேன்,” என்று இத்தாலியப் பிரதமர் ஜியார்ஜியா மெலோனி கூறினார்.

கிட்டத்தட்ட 300 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ரஷ்யச் சொத்துகளை ஜி-7 அமைப்பு முடக்கியுள்ளது. அவற்றிலிருந்து கிடைக்கும் லாபத்தைப் பயன்படுத்தி உக்ரேனுக்கு வழங்கப்படும் கடன் தொடர்பிலான மேல்விவரங்கள் அடுத்த சில வாரங்களுக்குள் உறுதிப்படுத்தப்படும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிகிறது.

முன்னதாக, US$50 பில்லியன் வரையிலான நிதியைத் தானே வழங்க அமெரிக்கா முன்வந்தது என்றும் பின்னர் மற்ற நாடுகளும் பங்களிப்பதாக அறிவித்ததால் அமெரிக்காவின் பங்களிப்பு குறையக்கூடும் என்றும் அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஜி-7 நாடுகளில் யார் ஆட்சியில் இருந்தாலும் உக்ரேனுக்குக் கடனுதவி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவேளை திரு டோனல் டிரம்ப் வெற்றி பெற்றால் உக்ரேனுக்கு அவர் அதிகம் உதவ மாட்டார் என்று கருதப்பட்ட நிலையில் புதிய ஒப்பந்தம் அந்தக் கவலையைப் போக்குவதாக அமைந்துள்ளது.

மாநாட்டில், அமெரிக்கா, ஜப்பான் ஆகியவற்றுடன் இருதரப்பு, நீண்டகாலப் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் உக்ரேன் கையொப்பமிட்டது.

குறிப்புச் சொற்கள்