தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உக்ரேனுக்கு நீண்டகாலப் பாதுகாப்பு வழங்க நேட்டோ திட்டம்

2 mins read
476a7e78-cf70-4685-9973-7fa039e5a50d
நேட்டோ உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக லித்துவேனியா சென்றுள்ளார் உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி. - படம்: ஏஎஃப்பி

வில்னியஸ் (லித்துவேனியா): புதன்கிழமை நடைபெறும் நேட்டோ உச்சநிலை மாநாட்டில் உக்ரேனுடன் நீண்டகாலப் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்ய ஜி7 தலைவர்கள் ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், நேட்டோவில் உக்ரேன் சேர்வதற்கு அவர்கள் ஒரு காலகட்டம் வகுக்காதது உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்குச் சினமூட்டியது.

பாதுகாப்பு ஒப்பந்தத்தில் தற்காப்புச் சாதனங்கள், பயிற்சி, உளவுப் பகிர்வு போன்றவை உள்ளடங்கும்.

ர‌‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு “வலுவான சமிக்ஞை” அனுப்பப்படும் என்று பிரிட்டி‌‌ஷ் பிரதமர் ரி‌ஷி சுனக் கூறினார்.

உக்ரேன் நேட்டோவில் சேர ஒரு காலகட்டம் வகுப்பதற்கு நேட்டோ தயங்குவது குறித்து உக்ரேன் அதிபர் கொதிப்படைந்ததைத் தொடர்ந்து உக்ரேனுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இரண்டு நாள் நேட்டோ மாநாட்டின்போது ஜி7 தலைவர்கள் இதில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“உக்ரேனுக்கு நீண்டகாலப் பாதுகாப்பு அளிப்பதற்கான முறையான ஏற்பாடுகளை” அதன் நட்புநாடுகள் துரிதப்படுத்தி வருவதாக திரு சுனக் புதன்கிழமை கூறினார்.

இந்த ஏற்பாட்டில் பிரிட்டன் முக்கிய பங்காற்றியதாக பிரிட்டி‌‌ஷ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேல்விவரங்கள் புதன்கிழமை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரேன் எப்போது, எப்படி நேட்டோவில் சேரலாம் என உறுதியாகக் கூறப்படாவிட்டாலும், விண்ணப்பப் பரிசீலனை வெகுவாகக் குறைக்கப்பட்டிருப்பதாக அரசதந்திரிகள் வலியுறுத்தினர்.

புதன்கிழமை முதல்முறையாகக் கூடவிருந்த புதிய நேட்டோ-உக்ரேன் மன்றம், ஒட்டுமொத்த நேட்டோ கூட்டணி நாடுகளையும் சந்திப்புக்கு அழைக்கும் உரிமையை உக்ரேனுக்குத் தருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

புதிய மன்றத்தின் முதல் கூட்டத்தில் உக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி நேட்டோ தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தவிருக்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் அவர் தனியாகச் சந்திப்பார்.

ஜி7 தலைவர்கள் ஆதரவளிக்கவிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடு தவிர, உக்ரேனுக்கு 70 போர்த் தளவாட வாகனங்களை அனுப்பி வைக்கவிருப்பதாகவும் பிரிட்டன் அறிவித்தது.

குறிப்புச் சொற்கள்