வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகரில் மாநாடு நடத்திய ஜி7 நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய கிழக்கில் நீடித்த நிலையான அமைதியின் அவசியத்தை வலியுறுத்தினர்.
உலக வர்த்தகத்தை வழிநடத்த ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் கட்டணமின்றி பயணம் செய்வதன் முக்கியத்துவத்தை மேற்கோள் காட்டியதோடு, தொடரும் போர் பொருளியலுக்கு ஏற்படுத்திவரும் பெரும் பாதிப்பையும் அவர்கள் சுட்டினர்.
ஜி7 அமைப்பின் இவ்வாண்டுக்கான தலைமைப் பொறுப்பேற்றுள்ள பிரான்ஸ், மாநாட்டுக்குப் பிறகு வியாழக்கிழமை (ஏப்ரல் 16) வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் வெளிவந்தன.
மத்திய கிழக்கில் நடக்கும் பூசல், ஜி7 நாடுகளின் நிதி அமைச்சர்களும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களும் விவாதித்த முக்கிய மூன்று அம்சங்களில் ஒன்று. ரஷ்யா-உக்ரேன் போரில் உக்ரேனுக்கு வழங்கும் ஆதரவு, சீனாவைத் தவிர்த்து அரிய கனிம வளங்கள் விநியோகத் தொடரை எவ்வாறு கையாள்வது ஆகிய இதர இரண்டு விவகாரங்கள் குறித்தும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அனைத்துலகப் பண நிதியம், உலக வங்கி ஆகிய அமைப்புகளுடன் நடந்த சந்திப்புக் கூட்டங்களுக்கு இடையே இந்த தனிப்பட்ட ஜி7 மாநாடு நடந்துள்ளது.
“ஜி7 மாநாட்டின் முடிவு, அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்ட ஒன்றாகும். உலகப் பொருளியலுக்கு மத்திய கிழக்குப் போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் அதனை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். நீடித்த நிலையான அமைதியை எட்டுவதன் அவசியத்தை உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மறு உறுதிப்படுத்தினர்,” என்று அறிக்கை குறிப்பிட்டது.
நடக்கும் போரினால் எரிவாயு, விநியோகத் தட்டுப்பாடு பொருளியல்மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, விலைவாசியையும் உயர்த்தியுள்ளது. அதனைச் சமாளிக்க ஜி7 உறுப்பு நாடுகள் தயாராக வேண்டும் என்று பிரெஞ்சு நிதி அமைச்சர் ரோலன்ட் லெஸ்கியொர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு மோதலின் விளைவால், அண்மையில் ஜி7 நாடுகளின் ஆதரவுடன் அனைத்துலக எரிபொருள் அமைப்பு வரலாறு காணாத அளவு உறுப்பு நாடுகளின் கைவசம் இருந்த எண்ணெய் சேமிப்புகளைச் சந்தையில் விடுவித்தது.

