மின்னெசோட்டா: அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ள முக்கியக் கனிமவளங்கள் குறித்த ஜி7 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) தெரிவித்துள்ளார்.
மேம்பட்ட பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளை உள்ளடக்கிய அந்த நிதி அமைச்சர்கள் மாநாடு திங்கட்கிழமை (ஜனவரி 12) அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
அதில் கலந்துகொள்ளும் ஜி7 தவிர்த்த மற்ற நாடுகள் பற்றிய விவரங்களை அவர் வெளியிடவில்லை. இந்தியா அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டதா என்பதையும் அவர் குறிப்பிடவில்லை.
கடந்த ஆண்டு கனடாவில் நடந்த ஜி7 கூட்டத்திற்குப் பிறகு கனிம வளங்கள் குறித்து விவாதிக்க ஒரு தனிப்பட்டச் சந்திப்பை நடத்த முயன்று வந்ததாக அவர் மேலும் கூறினார்.
ஜி7 உறுப்பு நாடுகளில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகள் அடங்கும்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜி7 நாடுகளுடன் ஆஸ்திரேலியா, சில்லே, இந்தியா, மெக்சிகோ, தென்கொரியா ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் கனிம வளங்கள் பற்றி இணையத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர் என்பதையும் திரு ஸ்காட் பெசன்ட் குறிப்பிட்டார்.
மின்னெசோட்டா நகரில் இயங்கும் படகு தொழிற்துறைப் பகுதியின் பொறியியல் ஆய்வு நிலையத்தை பார்வையிட்டபோது இந்த விவரங்களை அவர் வெளியிட்டார்.

