ஜோகூர் பாரு: மலேசியாவின் சுங்கத் துறை அதிகாரிகள், ‘கெட்டும்’ என்ற ஒருவகை மூலிகையை உற்பத்திசெய்து பானங்களாகத் தயாரிக்கும் கும்பலை முறியடித்துள்ளனர்.
அந்தக் கும்பல் தாமான் கெம்பாஸ் உத்தாமா என்ற இடத்தில் ஓராண்டாகச் செயல்பட்டுவந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் 28 வயதிலிருந்து 35 வயதுக்கு உட்பட்ட உள்ளூர் ஆடவர் ஒருவரும் இரண்டு இந்தோனீசியப் பெண்களும் கைதுசெய்யப்பட்டனர் என்றார் ஜோகூர் சுங்கத் துறை இயக்குநர் அமினுல் இஸ்மீர் முகமது சுஹைமி.
கெட்டும் இலைகளை கெடாவிலிருந்து தருவித்ததாக நம்பப்படும் கும்பல், அவற்றைப் பானங்களாகத் தயாரித்து 1.5 லிட்டர் போத்தல்களை 16 ரிங்கிட்டிற்கு விற்றதாகக் கண்டறியப்பட்டது.
வாடகை வீட்டில் செயல்பாடுகள் இடம்பெற்றன என்றும் ஓராண்டுக்கும்மேல் அந்தக் கும்பல் செயல்பட்டுவந்தது என்றும் திரு அமினுல் இஸ்மீர் கூறினார்.
பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 9 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள்மூலம் கும்பலைச் சேர்ந்தோர் கைதுசெய்யப்பட்டனர்.
கம்போங் கெம்பாஸ் டேனாய் என்ற இடத்தில் உள்ள வீட்டில் நடத்தப்பட்ட முதல் சோதனையில் பிளாஸ்டிக் பைகளில் 103 கிலோகிராம் எடைகொண்ட கெட்டும் இலைகளும் 189.50 லிட்டர் எடையுள்ள கெட்டும் பானங்களும் வைக்கப்பட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட 9,805 ரிங்கிட்.
அறை மணி நேரத்திற்குப் பிறகு தாமான் கெம்பாஸ் உத்தாமா என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் 442.9 கிலோகிராம் எடைகொண்ட கெட்டும் இலைகளும் 1,642.5 கெட்டும் பானங்களும் கண்டெடுக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட 66,991 ரிங்கிட்.
தொடர்புடைய செய்திகள்
பாழடைந்த, பூட்டப்பட்ட நிலையில் இருந்த தொழிற்சாலையில் கெட்டும் பானங்கள் காய்ச்சப்பட்டதாகவும் வீட்டிலிருந்து அவை விநியோகம் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கும்பலைச் சேர்ந்த பிற உறுப்பினர்களை அதிகாரிகள் தேடிவருகின்றனர்.
கெட்டும் பானங்களைத் தயாரித்த குற்றத்தை எதிர்கொள்வோருக்கு அதிகபட்சம் 100,000 ரிங்கிட் வரையிலான அபராதம், ஐந்தாண்டுவரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

