மலாக்கா: மலாக்காவில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் ஒரு மாணவி, இரண்டு மூத்த மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளிக்குச் செல்ல மறுப்பது உட்பட மனவுளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மலாய் நாளிதழான சினார் ஹரியான் தகவலின்படி, இந்தச் சம்பவம் அக்டோபர் 2ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் அலோர் காஜா பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மாணவியின் பள்ளி வகுப்பறையில் நிகழ்ந்தது.
சந்தேக நபர்கள் காணொளியாகப் பதிவுசெய்த இந்தப் பாலியல் வன்கொடுமையைக் வேறு இரண்டு மாணவர்களும் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
மாணவர்களிடையே இந்தக் காணொளி பரவிய பின்னரே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் இது ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாருக்கு அக்டோபர் 10ஆம் தேதி மாலை தெரியவந்தது. அதன்பின் அவர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட அதே நாளில், சந்தேகத்தின் பேரில் நான்கு மாணவர்களும் காவலில் வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, சினார் ஹரியான் நாளிதழால் தொடர்புகொள்ளப்பட்ட மலாக்கா காவல்துறைத் தலைவர் ஸுல்கைரி முக்தர், புகார் கிடைத்ததை உறுதிசெய்ததுடன் இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது எனக் கூறினார்.
“விசாரணைக்கு உதவுவதற்காக அனைத்து சந்தேக நபர்களும் அக்டோபர் 16 வரை விசாரணைக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் தெரிவித்தார்.