இறைச்சிக்காகப் பூனைகளைக் கடத்திய கும்பல் சிக்கியது; 400 பூனைகள் மீட்பு

இறைச்சிக்காகப் பூனைகளைக் கடத்திய கும்பல் சிக்கியது; 400 பூனைகள் மீட்பு

1 mins read
430a6f42-edc3-422e-a6f2-fe8a601e3653
மீட்கப்பட்டவற்றில் 40 பூனைகள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

ஹோ சி மின் சிட்டி: வியட்னாமில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகளை இறைச்சிக்காகக் கடத்திய கும்பலை அந்நாட்டுக் காவல்துறை முறியடித்துள்ளது.

கொன்று தின்னப்படவிருந்த 400க்கும் மேற்பட்ட பூனைகள் மீட்கப்பட்டதாக விலங்கு நல அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

பூனைக் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒன்பது பேர் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டதாக ஹோ சி மின் சிட்டி காவல்துறையின் அதிகாரத்துவ நாளிதழ் தெரிவித்தது.

உயிருடன் 400க்கும் மேற்பட்ட பூனைகளையும், கொன்று பதப்படுத்தி வைத்திருந்த 80 பூனைகளையும் அதிகாரிகள் மீட்டனர். இன்னோர் இடத்திலிருந்தும் 21 பூனைகள் மீட்கப்பட்டன.

வியட்னாமில் நாய் மற்றும் பூனை இறைச்சி சட்டபூர்வமானது என்றாலும், விற்பனையாளர்கள் அந்த விலங்குகள் எங்கிருந்து வாங்கப்பட்டன என்பதற்கான சான்றிதழ்களைப் பெற்றிருப்பது கட்டாயமாகும்.

தெற்கு வியட்னாமில் கடந்த மூவாண்டுகளாகப் பூனைகளைக் கடத்திவந்ததைச் சந்தேகப் பேர்வழிகள் ஒப்புக்கொண்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

மீட்கப்பட்டவற்றில் ஏறத்தாழ 40 பூனைகள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதே நேரத்தில், மீட்கப்பட்டவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட பூனைகள் பின்னர் உயிரிழந்தன.

“எஞ்சிய பூனைகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒபப்டைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆயினும், தற்போது வழக்கின் சாட்சியங்களாகக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அப்பூனைகளைப் பராமரிப்பதே எங்களது முக்கிய நோக்கம்,” என்று ‘விலங்குநேய உலகம்’ எனும் அமைப்பைச் சேர்ந்த கரன்வீர் குக்ரேஜா கூறினார்.

அந்த அமைப்பு பூனைகளுக்கான உணவு மற்றும் காற்றோட்ட வசதிகளையும் செய்துகொடுத்துள்ளது. நூற்றுக்கணக்கான பூனைகளின் உயிரைக் காப்பாற்றிய காவல்துறையையும் அது பாராட்டியது.

குறிப்புச் சொற்கள்
வியட்னாம்பூனைதிருட்டு