சரவாக்கில் ‘ஹோம்ஸ்டே’ தளங்களை பயன்படுத்திய கும்பல் அம்பலம்: 16.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

சரவாக்கில் ‘ஹோம்ஸ்டே’ தளங்களை பயன்படுத்திய கும்பல் அம்பலம்: 16.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

படம்: பிக்சாபே

23 Apr 2026 - 5:18 pm

1 mins read

கூச்சிங்: மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் சுற்றுப்பயணிகளுக்கான ‘ஹோம்ஸ்டே’ தளங்களை போதைப்பொருளைப் பொட்டலம் கட்டுதல், சேமிப்புக் கிடங்குகளாக வாடகைக்கு எடுத்து பயன்படுத்திய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் குற்றச் செயல்கள் அம்பலமாகியுள்ளன. இம்மாதம் சரவாக் மாநில கூச்சிங்கைச் சுற்றி நடந்த இரண்டு சோதனை நடவடிக்கைகளில் நான்கு நபர்களைக் கைது செய்து, சுமார் 16.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு வகையான போதைப்பொருளைக் காவல்துறை பறிமுதல் செய்ததையடுத்து இது தெரியவந்துள்ளது. சரவாக்கில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே இது மிகப் பெரிய போதைப்பொருள் பறிமுதல் ஆகும்.

“முதல் வழக்கு ஏப்ரல் 7ஆம் தேதி சாந்துபோங்கில் உள்ள ஒரு ஹோம்ஸ்டேயில் நடத்தப்பட்ட சோதனையை உள்ளடக்கியது. இதில் தம்பதியர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 41 மற்றும் 31 வயது,” என்று சரவாக் காவல்துறை ஆணையர் முகம்மது ஸைனால் அப்துல்லா தெரிவித்தார்.

எம்டிஎம்ஏ வகை போதைப்பொருள் 107.5 கிலோகிராம், கெட்டமின் 1.3 கிலோ, ஐந்து எரிமின் மாத்திரைகள், எக்ஸ்டஸி மாத்திரைகள் மற்றும் சியாபு 28 கிராம் ஆகிய பல்வேறு வகையான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இரு சந்தேக நபர்களுக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதியானது. அதேவேளையில், அந்தப் பெண்ணின் மீது ஏற்கெனவே மூன்று குற்றப் பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபோதைப்பொருள்சரவாக்