குண்டர் கும்பல் வன்முறை; காவல்துறையினர் எழுவர் மரணம்

1 mins read
5f33b65d-f6c4-47d3-94a8-bf8bd3ba695a
சிறைக் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளை மடக்கிப் பிடித்த அதிகாரிகள். - படங்கள்: குவாட்டமாலா உள்துறை அமைச்சு / எக்ஸ் தளம்

குவாட்டமாலா சிட்டி: குவாட்டமாலாவில் உள்ள சில பகுதிகளில் குண்டர் கும்பல்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதை அடுத்து, ஏழு காவல்துறை அதிகாரிகள் மாண்டனர்.

இச்சம்பவம் குவாட்டமாலா நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) காலை நிகழ்ந்தது.

அண்மையில், அந்நாட்டில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் இருந்த கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டு சிறைச்சாலையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். குண்டர் கும்பல் தலைவருக்குச் சிறையில் கூடுதல் சலுகை தரப்பட வேண்டும் என்று அவர்கள் அடிபோட்டனர்.

இருப்பினும், பாதுகாப்புப் படையினர் கைதிகளின் வன்முறையை முறியடித்து சிறைச்சாலையை தங்கள் வசப்படுத்திக்கொண்டனர்.

குண்டர் கும்பல் தலைவர் ஒருவரையும் அதிகாரிகள் பிடித்தனர்.

இதையடுத்து, நாட்டின் சில பகுதிகளில் வன்முறை வெடித்தது.

காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதில் ஏழு காவல்துறை அதிகாரிகள் மாண்டதாக குவாட்டமாலாவின் உள்துறை அமைச்சர் மார்க்கோ அண்டோனியோ வில்லேடா தெரிவித்தார்.

பத்து காவல்துறை அதிகாரிகள் காயமடைந்ததாக அவர் கூறினார்.

குண்டர் கும்பலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று குவாட்டமாலா அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட குண்டர் கும்பல்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது சூளுரைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்