ஜெருசலம்: இஸ்ரேலில் ஆட்சியமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக வலதுசாரி எதிர்க்கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துகொள்ள இஸ்ரேலின் யஷார் கட்சி இணங்கியுள்ளது.
முன்னாள் ராணுவத் தலைவர் காடி ஐசன்காட் தலைமையிலான யஷார் கட்சி செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) இத்தகவலை வெளியிட்டது.
‘இஸ்ரேல் அவர் ஹோம்’ கட்சித் தலைவர் அவிக்டோர் லிபர்மேனைச் சந்தித்துப் பேசிய பிறகு திரு ஐசன்காட் இவ்வுடன்பாட்டை எட்டினார்.
இஸ்ரேலில் அக்டோபர் 27ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமைந்த முதல் கூட்டணி இதுவாகும்.
பொதுத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு பெரும்பான்மையை இழந்தார்.
இதையடுத்து, ஆட்சியமைக்குமாறு திரு ஐசன்காட்டை அதிபர் ஐசக் ஹெர்சாக் கேட்டுக்கொண்டார். திரு நெட்டன்யாகு தற்காலிகப் பிரதமராகத் தொடர்கிறார்.
120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் திரு நெட்டன்யாகுவின் லிகுட் கூட்டணி எதிர்பார்ப்பைவிடச் சிறப்பாகச் செயல்பட்டாலும் பெரும்பான்மையை இழந்து 53 இடங்களை மட்டுமே பிடித்தது.
21 இடங்களை வென்ற யஷார் கட்சியும் 7 இடங்களை வென்ற லிபர்மேன் கட்சியும் அடங்கிய கூட்டணி 48 இடங்களைக் கொண்டுள்ளது.
இருப்பினும், 19 இடங்களைக் கொண்ட அரபுச் சிறுபான்மைக் கட்சிகள் திரு நெட்டன்யாகுவைக் கடுமையாக எதிர்ப்பதால் திரு ஐசன்காட்டுக்கு அவை ஆதரவளிக்க வாய்ப்புள்ளது.
அரபுக் கட்சிகளின் ஆதரவுடனான ஆட்சியையும் திரு நெட்டன்யாகுவுடனான ஐக்கிய அரசாங்கத்தையும் எதிர்த்து வந்த லிபர்மேன் இக்கூட்டணியில் இணைந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரு நெட்டன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே தமது முக்கிய நோக்கம் எனத் திரு லிபர்மேன் கூறியுள்ளார்.
28 நாள்கள் அவகாசத்தில் டிசம்பர் 6ஆம் தேதிக்குள் திரு ஐசன்காட் ஆட்சியமைக்க வேண்டும். மேலும் 14 நாள்கள் அவகாசம் கோரவும் அவருக்கு உரிமையுள்ளது.
அவர் தோல்வியடைந்தால் திரு நெட்டன்யாகுவுக்கு வாய்ப்பு கிடைக்கும். எவராலும் ஆட்சியமைக்க முடியாவிட்டால் அடுத்த ஆண்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.
இதற்கிடையே, ஆட்சி அமைப்பது குறித்து லிகுட் கட்சியுடன் திரு ஐசன்காட் பேசிவருவதால், 8 இடங்களை வென்ற இடதுசாரி ஜனநாயகக் கட்சி அவருடனான பேச்சுவார்த்தையை நிறுத்திவைத்துள்ளது.
திரு நெட்டன்யாகு இல்லாத, அரபுக் கட்சிகள் அடங்கிய அரசாங்கத்தையே தாம் விரும்புவதாக அக்கட்சித் தலைவர் யாயர் கோலன் தெரிவித்துள்ளார்.
