ஜகார்த்தா: இந்தோனீசியாவிலிருந்து 468 பேருடன் சவூதி அரேபியாவுக்குப் புறப்பட்ட கருடா இந்தோனீசியா விமானத்தின் இயந்திரம் தீப்பிடித்துக்கொண்டதால் புதன்கிழமை (மே 15) அது அவசரமாகத் தரையிறங்கியது.
சவூதியின் மதினா நகருக்குப் புறப்பட்ட கருடா-1105 விமானம், மாலை 5.15 மணிக்கு இந்தோனீசியாவின் மகஸ்ஸார் நகரில் உள்ள விமான நிலையத்துக்குத் திரும்பியது. இச்சம்பவத்தில் பயணிகள் காயமடையவில்லை.
விமானத்தில் ஹஜ் யாத்ரீகர்கள் உட்பட 450 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்ததாக கருடா தலைமை நிர்வாகி இர்ஃபான் செத்தியாபுத்ரா தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் வலம் வந்த காணொளி ஒன்று, விமானம் புறப்பட்டதும் அதன் இயந்திரம் தீப்பிடித்துக்கொள்வதைக் காட்டியது.
பாதுகாப்பு விசாரணைக்காக அந்த விமானம் சேவையிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டதாக திரு இர்ஃபான் சொன்னார்.
விமானம், புறப்பட்ட இடத்துக்குத் திரும்பியதும் பயணிகள் தங்குமிடத்துக்கு மாற்றிவிடப்பட்டனர். புதன்கிழமை பின்னர் மாற்று விமானத்தில் அவர்கள் சவூதிக்குப் புறப்பட்டதாக அவர் கூறினார்.

