கோலாலம்பூர்: ‘புடி மடானி’ எனப்படும் அரசாங்கத்தின் எரிபொருள் மானியத் திட்டத்தில் 14 மில்லியன் மலேசியர்கள் பயனடைந்துள்ளனர்.
அத்திட்டத்தின்கீழ் மே மாதம் 31ஆம் தேதி வரையில் 11.1 பில்லியன் லிட்டர் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது என மலேசிய நிதி அமைச்சு தெரிவித்துள்ளதாக மலாய் மெயில் ஊடகம் வியாழக்கிழமை (ஜூன் 25) செய்தி வெளியிட்டது.
எரிபொருளின் மொத்த விற்பனை 22.1 பில்லியன் ரிங்கிட் (S$6.4 பில்லியன்) என மதிப்பிடப்பட்டதாகவும் அதில் 11.2 பில்லியன் ரிங்கிட்டை (S$3.5 பில்லியன்) மானியமாக அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாகவும் அமைச்சு விளக்கியது.
2025ஆம் ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், அரசாங்கத்தின் மானியச் செலவு மும்மடங்கு அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்குப் பூசல், புடி மடானி திட்டத்தில் அதிக மானியச் செலவை ஏற்படுத்திவிட்டதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டது.
“மானியத் திட்டத்தின் செயல்பாட்டை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்துவரும். தேவைப்படும்போது தகுந்த மேம்பாடுகளை மேற்கொள்வதோடு, நியாயமான முறையில் உதவி தேவைப்படுவோருக்கு மானியம் வழங்கப்படுவதைத் திறம்பட உறுதிசெய்யும்,” என்று நிதி அமைச்சு புதன்கிழமை (ஜூன் 24) தெரிவித்தது.
மானியத் திட்டம் குறித்து விளக்கமளிக்கும்படி,எதிர்க்கட்சியான பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கோரிக்கைக்கு அமைச்சு பதில் அளித்தது.
மானியத்திற்குத் தகுதிபெற தனிப்பட்ட விண்ணப்பங்கள் எவருக்கும் தேவையில்லை என்று நிதி அமைச்சு வலியுறுத்தியது. அவர்கள் மலேசிய குடிமக்களாகவும் மைகாட் (MyKad) அட்டையை வைத்திருப்பவராகவும் வாகன உரிமம் பெற்றவராகவும் இருந்தால் போதுமானது என்று அமைச்சு குறிப்பிட்டது.
உதவி தேவைப்படுவோர் அதனைப் பெறாமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, பல நடவடிக்கைகளை அரசாங்கமும் நிதி அமைச்சும் ஏற்படுத்தியுள்ளதையும் அது விவரித்தது.
புடி மடானி திட்டத்துக்கென வாடிக்கையாளர் சேவை நிலையம் இயங்குவதாகவும் தகுதிபெறுவோர் விவரம் அறிந்துகொள்ளவும் பரிவர்த்தனைகளைச் சரிபார்க்கவும் ஏதுவாக இணையத்தளம் ஒன்று செயல்படுவதாகவும் அமைச்சு தெரிவித்தது.
மேலும், சமூக ஊடகங்கள் வழியாகத் தொடர்ந்து பொது அறிவிப்புகள் செய்யப்படுவதையும் அமைச்சு சுட்டியது.

