டோஹா: இஸ்ரேலும் ஹமாசும் உண்மையிலேயே போரை நிறுத்துவதற்கான விருப்பத்தையும் தீவிரத்தையும் காட்டும் வரை காஸா சமரசப் பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்படும் என்று கத்தார் அறிவித்துள்ளது.
கத்தார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் நவம்பர் 9ஆம் தேதி இது குறித்த விவரங்களை வெளியிட்டார்.
ஓராண்டாக கத்தார் அமைதிப் பேச்சை நடத்தி வருகிறது. அதன் பல முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன. இந்த நிலையில் இஸ்ரேலிடமும் ஹமாசிடமும் சமரசப் பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைத்துள்ளதாக அக்டோபரில் கத்தார் தெரிவித்தது என்று பேச்சாளர் மாஜெட் அல் அன்சாரி கூறினார்.
“10 நாட்களுக்கு முன்பு, ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான கடைசி முயற்சிகளின் போது, அந்தச் சுற்றில் ஓர் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஹமாசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சமரசம் செய்வதற்கான தனது முயற்சிகளை நிறுத்துவதாக கத்தார் இரு தரப்பிடமும் தெரிவித்துவிட்டது,” என்று அறிக்கை வாயிலாக அவர் தெரிவித்தார்.
“கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பும் தங்கள் விருப்பத்தையும் தீவிரத்தையும் காட்டும்போது கத்தார் தனது சமரச முயற்சிகளை மீண்டும் தொடங்கும்,” என்று திரு அன்சாரி குறிப்பிட்டார்.
“கத்தாரில் உள்ள அலுவலகத்தின் முக்கிய குறிக்கோள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்துவது. இது, முந்தைய கட்டங்களில் போர் நிறுத்தத்திற்கு பங்களித்துள்ளது,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, காஸா பேச்சுவார்த்தையிலிருந்து கத்தார் பின்வாங்குவதாகவும் ஹமாஸ் அலுவலகம், எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறவில்லை என்றும் விவரமறிந்த தூதரகத் தகவல்கள் ஏஎஃப்பியிடம் தெரிவித்துள்ளன.