தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு குறித்து மறுஆய்வு: மலேசியப் பிரதமர் அன்வார்

1 mins read
d2f99092-d1ae-4548-98a4-c3e6f3766fbe
மலேசிய சுங்கத்துறை வியாழக்கிழமை (ஏப்ரல் 24) ஏற்பாடு செய்த நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: பெர்னாமா

புத்ராஜெயா: மலேசியப் பொருளியல் வளர்ச்சி தொடர்பான அனைத்துலகப் பண நிதியத்தின் அண்மைய மதிப்பீடு குறித்து பேங்க் நெகாரா மலேசியாவும் கருவூலத் துறையும் மறுஆய்வு செய்யும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்த முழுமையான அறிக்கை வரும் மே 5ஆம் தேதி இடம்பெறும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இவ்வாண்டு மலேசியாவின் பொருளியல் 4.7 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று கடந்த ஜனவரியில் அனைத்துலகப் பண நிதியம் முன்னுரைத்திருந்தது.

இந்நிலையில், அவ்வமைப்பு தனது அண்மைய ‘உலகப் பொருளியல் கண்ணோட்டம் - ஏப்ரல் 2025’ அறிக்கையில் அவ்விகிதத்தை 4.1 விழுக்காடாகக் குறைத்துள்ளது.

இதுகுறித்துக் கருத்துரைத்த நிதியமைச்சருமான திரு அன்வார், அனைத்துலகப் பண நிதியத்தின் பொருளியல் வளர்ச்சி மதிப்பீடானது மலேசியாவிற்கானது மட்டுமன்று, அது உலகளாவிய மறுமதிப்பீட்டின் ஒரு பகுதி எனக் குறிப்பிட்டார்.

“அமெரிக்கா, சீனா போன்ற பல நாடுகளை உள்ளடக்கிய அனைத்துலக மறுமதிப்பீடு இது. அந்நாடுகளின் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பும் சற்று குறைந்துள்ளது,” என்றார் அவர்.

மலேசிய சுங்கத்துறை வியாழக்கிழமை (ஏப்ரல் 24) ஏற்பாடு செய்த நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிறகு திரு அன்வார் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, 2026ஆம் ஆண்டில் மலேசியப் பொருளியல் 3.8 விழுக்காடு வளர்ச்சியடையும் என்றும் அனைத்துலகப் பண நிதியம் முன்னுரைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்