கோலாலம்பூர்: மலேசியாவின் 16வது பொதுத் தேர்தல் 2028ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு முன்பு நடத்தப்படவேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
பொதுத் தேர்தல், 2027ஆம் ஆண்டு தேசிய தினத்துக்கு முன்பு அல்லது பின்பு நடைபெறக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“16வது பொதுத் தேர்தல் 2028ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு முன்பு நடைபெறவேண்டும். அதுதான் வரையப்பட்டுள்ள காலகட்டம். பெரும்பாலும் தேசிய தினத்துக்கு முன்பு அல்லது பின்பு நடக்கும். அந்தக் காலகட்டத்தைத் தாண்டி நடைபெறாது,” என்று தேசியக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் அவர் குறிப்பிட்டார். அந்தக் கலந்துரையாடல் டிவி1 ஒளிவழியில் புதன்கிழமை (நவம்பர் 25) இரவு திரையிடப்பட்டது.
தொடர்ந்து மலேசியாவை வழிநடத்த விருப்பம்
வாக்காளர்கள் வாய்ப்பு தந்தால் நிச்சயமாகத் தாம் நாட்டை மறுபடியும் வழிநடத்த விரும்புவதாக திரு அன்வார் தெரிவித்தார்.
“நான் இந்த நாட்டை நேசிக்கிறேன். இதன் ஆற்றலில் நம்பிக்கை கொண்டுள்ளேன். நமது இளையர்கள்மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். இவ்வட்டாரத்திலும் உலகிலும் மலேசியா வலுவான நாடாக உயர்ந்து நிற்க விரும்புகிறேன்,” என்றும் அவர் சொன்னார்.
எச்சரிச்சை
இந்நிலையில், சமயம் சார்ந்த கருத்துகளை ஆராய்ந்து அவற்றை நிரூபிக்க சரியான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொள்ளுமாறு திரு அன்வார் மலேசியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். தம்மைப் போன்ற அரசியல் தலைவர்கள் முன்வைக்கும் கருத்துகளுக்கும் இது பொருந்தும் என்றார் அவர்.
சமயம் சார்ந்த தொடர்பு நடவடிக்கைகள், தகவல்களின் அடிப்படையில் அமையவேண்டும் என்றும் அரசியல் ரீதியான கருத்துகளை சமயம் சார்ந்த உறுதியான தகவல்கள் என்று மக்கள் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
“சில வேளைகளில் அரசியலில் ஈராண்டுகளுக்கு ஒருமுறை சமயம் சார்ந்த கருத்துகள் (ஃபட்வா) மாறும். அவை சமய ஆசிரியர்கள் கூறுபவை என்று கருதுவதால் மக்கள் அவற்றைப் பின்பற்றுவர். ஆனால் உண்மையில் அவை அரசியல் கருத்துகளாகும்,” என்று அவர் விவரித்தார்.
அரசாங்கத்திலோ எதிர்க்கட்சிகளிலோ இருப்பவர்கள், சமூக ஊடகங்கள் இருப்பதால் மக்கள் தங்களை வல்லுநர்கள் எனச் சொல்லிக்கொண்டு அரசியலில் பலனடையும் நோக்கில் சமயம் சார்ந்த கருத்துகளைத் தெரிவிக்கக்கூடும் என்றார் திரு அன்வார்.
