கோலாலம்பூர்: ஜாலான் கென்டிங் ஹைலண்ட்ஸ் சாலையில் செல்லும் வாகனவோட்டிகள் விரைவில் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.
கென்டிங் மலேசியா நிறுவனம் அதனை உறுதிசெய்தது. 24 கிலோமீட்டர் நீளமுள்ள அந்தத் தனியார் சாலையைப் பராமரிக்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கட்டணத்திலிருந்து பெறப்படும் நிதி பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.
எல்லாம் முடிவுசெய்யப்பட்ட பிறகு, கட்டணங்களின் விவரங்களும் அவை நடைமுறைப்படுத்தப்படும் தேதியும் அறிவிக்கப்படும் என்று நிறுவனம் வியாழக்கிழமை (நவம்பர் 13) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
ஜாலான் கென்டிங் ஹைலண்ட்ஸ் சாலையைப் பராமரிப்பதற்கான செலவு அதிகரிக்கிறது. 1960களில் இருந்தே நிறுவனம்தான் அதனை ஏற்றுக்கொண்டுவந்துள்ளது. செலவை ஈடுகட்டவே கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாகக் கூறப்பட்டது.
கரடுமுரடான மலைப்பகுதியில் சாலையை கென்டிங் மலேசியா அமைத்தது. அந்தச் சாலை, ரிசோர்ட்ஸ் வோர்ல்டு கென்டிங் உல்லாசத் தலத்துடன் கென்டிங் ஹைலண்ட்ஸ் பாதையில் உள்ள மற்ற இடங்களுக்குச் செல்லவும் உதவுகிறது.
சாலை, அதிகம் பயன்படுத்தப்படுவதால் கடுமையான சேதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. எனவே, சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதிசெய்ய அடிக்கடி அதனைப் பராமரிப்பது அவசியம் என்று நிறுவனம் சொன்னது.


