கோலாலம்பூர்: மலேசியாவின் கெரிக் நகரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 15 யுபிஎஸ்ஐ பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
அந்த விபத்துக்கு ‘பிரேக்’ கருவி சரியாக வேலை செய்யாததோ வாகன இயந்திரக் கோளாறோ காரணமாக இருந்திருக்காது என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வாகனத்தின் எல்லா பிரேக் கருவிகளும் சரியாக செயல்பட்டுக்கொண்டிருந்தது ‘கணினிமய வாகனச் சோதனை நிலையம்’ (புஸ்போக்கொம்) வெளியிட்ட முதற்கட்ட சோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் தெரிவித்துள்ளார்.
நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் சனிக்கிழமை (ஜூன் 14) இத்தகவல்களை வெளியிட்டது.
“(கருவிகள்) சரியாகச் செயல்படாததற்கான அறிகுறி ஏதும் இல்லை,” என்று திரு லோ அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இயந்திரக் கோளாறுகளால் விபத்து நேர்ந்திருக்கும் சாத்தியம் அதிகம் இல்லை என்பதை இந்தக் கண்டுபிடிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன,” என்று அவர் சுட்டினார்.
“அப்படியென்றால் மனிதர் தவறு, சாலையின் நிலை உள்ளிட்ட காரணங்களால்தான் விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் அதிகம்,” என்று திரு லோக் விவரித்தார். முழு விசாரணை அறிக்கை தயாரான பிறகு பாதுகாப்பு தொடர்பான மேம்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்துவது, ஓட்டுநர் தகுந்த உரிமங்களைப் பெற்றிருப்பதை உறுதிசெய்வது, வாகனச் சேவை வழங்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது ஆகிய நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்.
“மரணமடைந்தோர் குடும்பத்தாருக்குப் போக்குவரத்து அமைச்சு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. அவர்களுக்கு நியாயம் கிடைப்பதையும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி நிகழாமல் இருப்பதையும் போக்குவரத்து அமைச்சு உறுதிசெய்யும்,” என்று திரு லோ விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
42 யுபிஎஸ்ஐ மாணவர்கள் இருந்த பேருந்து இம்மாதம் ஒன்பதாம் தேதி கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலைப் பதியில் விபத்துக்குள்ளானது. 13 மாணவர்கள் சம்பவ இடத்தில் மாண்டனர். மேலும் இரு மாணவர்கள் உயிரிழந்தது மருத்துவமனையில் உறுதிப்படுத்தப்பட்டது.