பெர்லின்: முதலில் எதிர்பாராத பின்னடைவைச் சந்தித்த ஜெர்மனியின் பிரதமர் வேட்பாளர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் 2வது வாக்கெடுப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திரு மெர்ஸ், 69, நாடாளுமன்ற கீழவையில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் 325 வாக்குகளுடன் பெரும்பான்மை பெற்றார்.
கடந்த பிப்ரவரியில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
இதில், கிறிஸ்துவ ஜனநாயக யூனியனை உள்ளடக்கிய கன்சர்வேடிவ் கூட்டணி வெற்றி பெற்றது.
இதையடுத்து ஜெர்மனியின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு ஜெர்மன் நாடாளுமன்றத்தில் மே 6ஆம் தேதி நடைபெற்றது.
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பிரதமர் வேட்பாளர் வெற்றி பெற 316 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் முதல் சுற்று வாக்கெடுப்பில் திரு மெர்ஸ் எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்தார்.
முதல் வாக்கெடுப்பில் அவருக்கு 310 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
2வது சுற்று வாக்கெடுப்பில் அவர், 325 வாக்குகளைப் பெற்று பிரதமராகத் தேர்வாகியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து உடனே பிரதமராக ஃபிரெட்ரிக் மெர்ஸ் பதவியேற்கவுள்ளார்.
அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெயின்மெய்சர் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க விருக்கிறார்.
முதல் ரகசிய வாக்கெடுப்பு ஒரு சம்பிராதயமாக நடைபெற்றது. இதில் மெர்ஸ் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மெர்சுக்கு பேரிடராக அமைந்த அந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மைக்கு ஆறு வாக்குகள் குறைந்தன.
இதையடுத்து நடைபெற்ற 2வது ரகசிய வாக்கெடுப்பில் அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

