தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

292,000 பேருக்குக் குடியுரிமை வழங்கிய ஜெர்மனி

1 mins read
d320ec76-1f1d-4de6-bb39-35ca5a2a476e
சென்ற ஆண்டு ஜெர்மானியக் குடியுரிமை பெற்றோரில் 83,150 பேர் சிரியர்கள். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

பெர்லின்: இதற்குமுன் இல்லாத அளவாக ஜெர்மனி சென்ற 2024ஆம் ஆண்டில் 291,955 பேருக்குக் குடியுரிமை வழங்கியது.

இது 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் 46 விழுக்காடு அதிகம்.

ஜெர்மானியக் குடியுரிமை பெற்றவர்களில் ஆக அதிகமானோர் சிரியர்கள். உள்நாட்டுப் போரை அடுத்து கடந்த 2015, 2016ஆம் ஆண்டுகளில் ஜெர்மனிக்கு அகதிகளாகச் சென்ற சிரியர்களில் பலரும் 2024ஆம் ஆண்டில் குடியுரிமை பெறுவதற்குத் தகுதிபெற்றனர்.

சென்ற ஆண்டு ஜெர்மானியக் குடியுரிமை பெற்றோரில் 28 விழுக்காட்டினர், அதாவது 83,150 பேர் சிரியர்கள். இது, அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் 10.1 விழுக்காடு அதிகம்.

அவர்களுக்கு அடுத்த நிலைகளில், துருக்கியர் (8%), ஈராக்கியர் (5%), ரஷ்யர் (4%), ஆப்கானியர் (3%) உள்ளனர்.

2023ஆம் ஆண்டில் 1,995 ரஷ்யர்கள் ஜெர்மானியக் குடியுரிமை பெற்ற நிலையில், அதற்கு மறுஆண்டில் அந்த எண்ணிக்கை 12,940ஆக உயர்ந்தது. அதுபோல, ஜெர்மானியக் குடியுரிமை பெற்ற துருக்கியர்களின் எண்ணிக்கையும் இருமடங்கைத் தாண்டி, 22,525 என்றானது.

ஜெர்மானியக் குடியுரிமை பெற்றாலும் அவர்கள் தங்களது சொந்த நாட்டின் குடியுரிமையையும் வைத்திருக்க புதிய குடியுரிமைச் சட்டம் அனுமதிக்கிறது.

இருப்பினும், பழைமைவாதிகளும் சமூக ஜனநாயகவாதிகளும் அடங்கிய ஜெர்மனியின் புதிய கூட்டணி அரசாங்கம், அவற்றுள் சில விதிமுறைகளை மீட்டுக்கொள்ளத் திட்டமிடுகிறது.

ஜெர்மானியக் குடியுரிமை பெற குறைந்தது ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற விதியை மீண்டும் கொண்டுவரவும் அது திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்