மெக்சிகோ ‘மயன்’ கோயில் மீது ஏறிய ஜெர்மானிய சுற்றுப்பயணி கைது

1 mins read
8dfd5749-f520-43f9-9095-77d9ba4e592a
மயன் கோயில்மீது ஜெர்மானிய சுற்றுப்பயணி ஒருவர் ஏறுவதை அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்துகிறார். - படம்: டெரசா அரோயோ

மெக்சிகோ: மெக்சிகோவில் மயன் கோயில் மீது ஏறிய ஜெர்மானிய சுற்றுப்பயணியை அந்நாட்டு அதிகாரிகள் கைதுசெய்தனர்.

ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் பழமையான மயன் கோயிலின் 25 மீட்டர் உயர கோபுரத்தின்மீது ஏற 2008ஆம் ஆண்டிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது என்று பிரிட்டிஷ் நாளேடு மெயில் தெரிவிக்கிறது.

யூகேட்டனில் உள்ள சிசிசென் லிட்ஸாவில் குகுல்கேனில் அந்த கோயில் உள்ளது.

சமூக ஊடகத்தில் இடம்பெற்ற காணொளியில் அடையாளம் தெரியாத 34 வயது நபர் கோயிலின் படிக்கட்டில் ஊர்ந்து ஏறுவதைப் பார்க்க முடிகிறது. அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அப்போது பார்வையாளர்கள் சிலர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர். சிலர் அவரை அடிக்க முன்னேறிச் செல்கின்றனர்.

ஆனால், தேசிய மானுடவியல், வரலாற்றுக் கழகத்தின் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் அவர்களின் தாக்குதலிலிருந்து பாதுகாத்து அவரை அழைத்துச் செல்கின்றனர்.

அந்தச் சுற்றுப்பயணியை கண்டுபிடிப்பதற்கு முன்பு கோபுரத்தில் உள்ள அறையில் அவர் மறைந்து இருக்க முயன்றதாக கூறப்படுகிறது.

‘கோட்டை’ என்றழைக்கப்படும் அக்கோயிலில் சுற்றுப்பயணி ஒருவர் விதிமுறையை மீறி நடந்திருப்பது கடந்த ஈராண்டுகளில் இது இரண்டாவது முறை.

கடந்த 2023ஆம் ஆண்டில் இதே கோயிலின் படிக்கட்டுமீது ஏறிய போலந்து நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டு, 5,000 பெசோ (S$117) அபராதம் விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்