லைப்ஸிக்: கிழக்கு ஜெர்மனி நகரான லைப்ஸிக்கில் திங்கட்கிழமை (மே 4) பிற்பகல் அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் புகுந்ததில் இருவர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர்.
மாண்டவர்கள் 63 வயது பெண் மற்றும் 77 வயது முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஜெர்மானியக் குடிமக்கள்.
காயமடைந்த 22 பேரில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக லைப்ஸிக் நகரத் தீயணைப்புத்துறைத் தலைவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்திற்குக் காரணமான 33 வயது ஜெர்மானியரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இதனை ஒரு ‘வன்முறை வெறியாட்டம்’ எனக் குறிப்பிட்ட காவல்துறை, இது தனிப்பட்ட ஒருவரின் செயல் என்றும் தற்போதைக்குப் பொதுமக்களுக்கு வேறு அச்சுறுத்தல் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்தச் செயலுக்குச் சமயம் அல்லது அரசியல் சார்ந்த உள்நோக்கம் இருந்ததற்கான எந்தச் சான்றும் இதுவரை கிடைக்கவில்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதே வேளையில், சந்தேகப் பேர்வழி ஏற்கெனவே மனநலப் பாதிப்பிற்கு ஆளானவர் என்று சேக்சனி மாநிலத் தலைவர் மைக்கல் கிரெட்ஸ்மர் கூறியுள்ளார்.
கார் மிக வேகமாக வந்து மக்கள்மீது மோதியதாகவும் பின்னர் அங்கிருந்த தூண்களில் மோதி நின்றதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர். உடனடியாக அங்கிருந்த சிலர் ஓடிச் சென்று, காரின் ஓட்டுநரைப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ஜெர்மனியில் 2024ஆம் ஆண்டு டிசம்பரில் மக்டேபர்க் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த தாக்குதலில் அறுவர் கொல்லப்பட்டதும் 2025 பிப்ரவரியில் மியூனிக்கில் இதேபோன்று கூட்டத்தினுள் கார் புகுந்ததில் 30 பேர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கவை.

