டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநில விலங்கியல் தோட்டத்தில் வாகனத்தில் உலாச் சென்ற இரண்டு வயதுச் சிறுமியை ஒட்டகச்சிவிங்கி கவ்வித் தூக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபாஸில் ரிம் வனவிலங்கு நிலையத்தில் இந்த வாரத் தொடக்கத்தில் நடந்த இச்சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் பரவிவருகிறது.
சிறுமி பைஸ்லி டோட்டன் தன் தாயார் சியர்ரா ராபர்ட்டுடன் ‘பிக்அப் டிரக்’ வகை வாகனத்தின் பின்பக்கம் அமர்ந்திருந்தார்.
சிறுமியின் கையில் விலங்கு உணவைக் கொண்ட பொட்டலம் இருந்தது.
அப்போது, ஏறக்குறைய 5 மீட்டர் உயரங்கொண்ட ஒட்டகச்சிவிங்கி ஒன்று பைஸ்லியின் கையிலிருந்த பொட்டலத்தினுள் வாயை நுழைக்க முயன்றது.
ஆனால் சிறுமியின் சட்டையின் ஒரு பகுதி வாயில் அகப்படவே அதைக் கவ்விய ஒட்டகச்சிவிங்கி, பைஸ்லியைக் கிட்டத்தட்ட ஒரு மீட்டர் உயரத்திற்குத் தூக்கியது.
தாயார் உரத்த குரலில் சத்தமிடவே சிறிது நேரம் கழித்துச் சிறுமியை அது விடுவித்தது. ஒட்டகச்சிவிங்கியின் வாயிலிருந்து விழுந்த மகளைத் தாயார் கைகளில் ஏந்திக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
அது மிகவும் அதிர்ச்சியூட்டிய சம்பவம் என்று அவர் கூறிய வேளையில், ஒட்டகச்சிவிங்கி உணவுப் பொட்டலத்தைப் பறித்துக்கொள்ளவே முயன்றதாகவும் ஆனால் சிறுமியின் சட்டை அகப்படவே அவளைத் தூக்கியதாகவும் தந்தை குறிப்பிட்டார்.
அதிர்ச்சியில் தான் உறைந்துபோனதாகவும் சொன்ன அவர் இது விபத்து, ஃபாஸில் ரிம் நிர்வாகத்தின் மீது தவறு இல்லை என்றார்.
இனி ‘பிக்அப் டிரக்’ வாகனங்களின் பின்புறம் அமர்ந்து உலாச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த வனவிலங்கு நிலைய நிர்வாகம் தெரிவித்தது.

