சிட்னி: ஆஸ்திரேலியாவின் புறநகரில் உள்ள ஒரு பகுதியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஐந்து வயதுச் சிறுமி கொல்லப்பட்டதால் ஆர்ப்பாட்டம் வெடித்துள்ளது. அவர்கள் ஆஸ்திரேலிய அவசரகாலச் சேவை ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.
‘குமான்ஜாயி’ குட்டிக் குழந்தை என்று குடும்பத்தினரால் அழைக்கப்படும் அந்தச் சிறுமி, அலிஸ் ஸ்பிரிங்சின் புறநகரில் உள்ள வீட்டிலிருந்து சனிக்கிழமை பின்னேரத்தில் காணாமல் போனார்.
ஆஸ்திரேலியாவின் வடக்கு வட்டாரத்தில் உள்ள அந்தப் பிரபலமான சுற்றுலா நகரைச் சுற்றியுள்ள பகுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் சிறுமியைத் தேடினர். அப்போது, சிறுமி சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.
சிறுமியைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஜெஃபர்சன் லூயிஸ் என்ற 47 வயது ஆடவரை உள்ளூர் மக்கள் கடுமையாகத் தாக்கிய நிலையில் அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
லூயிசுக்கு, ‘அலிஸ் ஸ்பிரிங்’ மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டது. அதையறிந்த 400க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் மருத்துவமனையைச் சூழ்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மருத்துவமனைக்குள் நுழைய முயற்சி செய்ததாக வடக்கு வட்டாரக் காவல்துறை ஆணையரான மார்ட்டின் டோல் ஏபிசியிடம் கூறினார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டு காவல்துறை வாகனங்களுக்குத் தீ வைத்து, கற்களை வீசித் தாக்கியதால் அவர்கள்மீது காவல்துறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியது.
“வன்முறையில் காவல்துறையினரும் அவசரகால ஊழியர்களும் தாக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளூர்வாசிகளுக்கும் காவல்துறைக்கும் இடையே நிலவிய ஒற்றுமையை அது பிரதிபலிப்பதாக இல்லை,” என்று திரு டோல் தெரிவித்தார்.
சிறுமியை தேடியபோது உள்ளூர்வாசிகளுக்கும் காவல்துறைக்கும் இடையே நிலவிய நெருங்கிய ஒத்துழைப்பை அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
வன்முறைச் சம்பவத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் இரண்டு மருத்துவ ஊழியர்களும் காயம் அடைந்தனர்.
சந்தேக நபரான லூயிசின் பாதுகாப்புக் கருதி டார்வின் நகரத்துக்கு அவர் மாற்றப்பட்டதாக டோல் மேலும் தெரிவித்தார்.
லூயிஸ்மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

