தோக்கியோ: ஜப்பானின் தோக்கியோவில் இயந்திர சைக்கிள் ஒன்றை ஓட்டிக்கொண்டே, ஆள்களின் முகங்களிலிருந்து தங்கள் மூக்குக்கண்ணாடியைப் பறிப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
‘ஷிஞ்ஜுக்கு’ பகுதியில் உள்ள அந்த 49 வயது சந்தேக நபரின் வீட்டில் கிட்டத்தட்ட 50 மூக்குக்கண்ணாடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் காவல்துறை கூறியது.
அதுபோன்ற மற்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் அவர் விசாரிக்கப்படுவதாகவும் அது தெரிவித்தது.
அத்தகைய இயந்திர சைக்கிள்கள் ஜப்பானில் பிரபலமாகி வருகின்றன என்றும் அந்நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகளுக்கும் போக்குவரத்துக் குற்றங்களுக்கும் அவை காரணமாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
அந்த ஆடவர்மீது, 3,000 யென் (S$27) மதிப்புள்ள மூக்குக் கண்ணாடியைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2ஆம் தேதி இரவு 9.15 மணிவாக்கில், சாலையில் பின்னால் இருந்த இருபது வயது மதிக்கத்தக்க ஆடவரை அவர் அணுகியதாகக் கூறப்படுகிறது.
அந்த ஆடவரை நிறுத்துவதற்காக, சந்தேக நபர் அருகில் உள்ள நிலையத்திற்கான திசையைப் பற்றிக் கேட்டார். அதன் பின்னர் ஆடவரின் மூக்குக் கண்ணாடியை அவர் திருடினார்.
பாதிக்கப்பட்டவர் பின்னர் அது குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், சம்பவம் குறித்து சந்தேக நபர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது.

