நியூயார்க்: அண்மைக் காலமாக விமானங்களில் பயணிகளின் பொருள்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்தத் திருட்டுச் சம்பவங்கள் சில நாடுகளில் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் (அயட்டா) அக்கறைத் தெரிவித்துள்ளது.
இந்தத் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க இனிவரும் வாரங்களில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்று அச்சங்கம் கூறியுள்ளது.
கடந்த 12 முதல் 18 மாதங்களில் சில குறிப்பிட்ட பாதைகளில் செல்லும் விமானங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதுகுறித்து தங்கள் உறுப்பினர்கள் கருத்து திரட்டியுள்ளனர் என்று அயட்டாவின் மூத்த துணைத் தலைவர் நிக் கரீன் தெரிவித்தார்.
திருட்டுச் சம்பவங்கள் ஆசிய நாடுகளில் உள்ள விமானங்களில் அதிகமாக நடப்பதாகத் தரவுகள் கூறுகின்றன.
கடந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் ஹாங்காங் பாதை விமானங்களில் 169 திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. திருட்டுச் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட பொருள்களின் மதிப்பு கிட்டத்தட்ட 710,000 வெள்ளி.
தோக்கியோவின் நரிட்டா அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களிலும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் சிங்கப்பூர் வழி விமானங்களில் நான்கு திருட்டுச் சம்பங்கள் நடந்துள்ளன.
கொவிட்-19க்குப் பின் தற்போது அனைத்துலக விமானப் பயணங்கள் பழைய நிலைக்குத் திரும்பி வந்துகொண்டிருக்கும் நிலையில் இந்தத் திருட்டுப் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.
இந்நிலையில், புதுடெல்லியில் நடந்த அயட்டாவின் வருடாந்தர பொதுக் கூட்டத்தில் விமானங்களின் மற்ற பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் திரு நிக் தெரிவித்தார்.
ஆகாயத்தில் செல்லும்போது விமானத்தில் ஏற்படும் அதிர்வுகள், விபத்துகள்குறித்து சரியான அறிக்கை சமர்ப்பித்தல், வழிகாட்டுக் கருவிகள் வேலை செய்யாமல் போவது, போர் போன்ற பதற்றமான பகுதிகளில் விமானங்கள் பறப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.