உலகப் பொருளியல் நிச்சயமற்ற சூழலை எதிர்நோக்கி இருக்கும் வேளையில், நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு அவசியம் என்று டாவோசில் கூடியிருக்கும் பொருளியல் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2025ஆம் ஆண்டில் வர்த்தகம், புவிசார் அரசியல் பதற்றங்கள், உயர்ந்து வரும் வட்டி விகிதம் என சவால்கள் இருந்தாலும் உலகப் பொருளியல் வளர்ச்சி அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதை உலகப் பொருளியல் வல்லுநர்களுடன் பல நிதி அமைப்புகளும் ஒன்றுபடக் கூறுகின்றன.
ஆயினும் உலகின் பொருளியல் வளர்ச்சி, அமெரிக்காவின் தலைமையில்தான் நடக்கும் என்று அனைத்துலக பண நிதிய நிர்வாக இயக்குநர் கிரிஸ்டலினா ஜார்ஜியேவா கூறினார்.
இதற்குக் காரணம் மற்ற நாடுகளைவிட அமெரிக்காவிடம் காணப்படும் உயர் உற்பத்தி நிலை, தேவைப்படும் நிதி ஆதாரம், தொழில்முனைவராவதற்கான வாய்ப்புகள் ஆகியவை அதிகம் இருப்பதே என்று அவர் விளக்கினார்.
டாவோஸ் மாநாட்டில் பங்கேற்ற அதிபர் தர்மன் சண்முகரத்னம், உலக நாடுகள் ஒன்று மற்றொன்றின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்துள்ளதை சுட்டி, நம்பிக்கைக்கு தேவையான அடித்தளத்தை வளர்க்க வேண்டும் என்று கூறினார். அத்துடன், ஒரு நாடு மற்றொரு நாட்டை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறும் நிலை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் திரு தர்மன் விளக்கினார்.
இந்தியாவுக்கு குவியும் முதலீடுகள்
இந்நிலையில், இந்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்நவ் ஐந்து மத்திய அமைச்சர்கள், மூன்று மாநில முதலமைச்சர்கள், மற்றும் பல மாநிலத் தலைவர்கள் அடங்கிய மிகப் பெரிய குழுவுடன் டாவோஸ் பொருளியல் மாநாட்டுக்குச் சென்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மாநாட்டில் இந்தியா 20 லட்சம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள முதலீடுகளை ஈர்த்துள்ளதாக பிடிஐ செய்தித் தகவல் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24ஆம் தேதி) கூறியது
நம்பிக்கை, திறன் ஆகியவையே உலக நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு முதலீடுகள் வரக் காரணம் என்று திரு அஷ்வினி வைஷ்நவ் விளக்கினார்.

