வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கச்சா எண்ணெய்ப் போக்குவரத்து மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பாவிடில், கோடைக் காலத்தில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அனைத்துலகப் பண நிதியம், உலக வங்கி, அனைத்துலக எரிசக்தி ஆணையம் ஆகியவை எச்சரித்துள்ளன.
ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்துள்ள போரால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதன் விளைவாக, உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இடம்பெறும் ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து கிட்டத்தட்ட முடக்கப்பட்டுள்ளது.
அதனால், உலகளாவிய எண்ணெய் இருப்பு, வரலாறு காணாத வேகத்தில் சரிந்து வருகிறது என்று அம்மூன்று அமைப்புகளின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை (மே 29) கூட்டறிக்கை வழியாகத் தெரிவித்தனர்.
பொதுவாக, கோடைக்காலத்தில் எரிசக்திக்கு அதிகத் தேவை இருக்கும். கூடிய விரைவில் நிலைமை சீராகி, ஹோர்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்து இயல்புநிலைக்குத் திரும்பாவிடில் அது உலகப் பொருளியல் மீட்சியைப் பெரிதும் பாதிக்கும் எனக் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எரிபொருள் மற்றும் உரங்களின் விலை உயர்வால் ஏழை நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பல நாடுகளில் பயிர்நடவுப் பருவம் தொடங்கியுள்ள நிலையில், உரங்களின் விலையேற்றம் உணவுப் பாதுகாப்பிற்குப் பேரச்சுறுத்தலாக மாறியுள்ளது.
மத்திய கிழக்குப் போரின் பாதிப்பால் உலகப் பொருளியல் வளர்ச்சி கணிப்பு குறைந்துள்ளதாக அனைத்துலகப் பண நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
மேலும், எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஏழை நாடுகளுக்குக் கிட்டத்தட்ட 20 முதல் 50 பில்லியன் டாலர் வரை நிதியுதவி தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவ்வகையில், பங்ளாதேஷ் ஏற்கெனவே நிதியுதவி கோரியுள்ளது என்றும் அதற்கான உதவித் திட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் அவர் விளக்கினார்.
கச்சா எண்ணெய்க்கும் எரிவாயுவிற்கும் வளைகுடா நாடுகளைப் பெரிதும் சார்ந்திருக்கும் நாடுகள், குறிப்பாகத் தெற்காசிய, தென்கிழக்காசிய நாடுகள் மத்திய கிழக்குப் போரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

