2010லிருந்து முதன்முறையாக உலகளாவிய வறுமைக் குறியீடு உயர்வு

2010லிருந்து முதன்முறையாக உலகளாவிய வறுமைக் குறியீடு உயர்வு

படம்: ஏஎஃப்பி

12 Oct 2026 - 4:52 pm

2 mins read

வாஷிங்டன்: 2010ல் தொடங்கப்பட்டதில் இருந்து முதன்முறையாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் (ஐநா) உலகளாவிய வறுமைக் குறியீடு உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.2 பில்லியனாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாட்டு மேம்பாட்டுத் திட்டம் (யுஎன்டிபி) திங்கட்கிழமை (அக்டோபர் 12) தெரிவித்தது.

தங்களது வருடாந்தர அறிக்கையின் 2026ஆம் ஆண்டு பதிப்பில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 51.5 மில்லியன் பேர் கடும் வறுமையில் வாழ்வதாக யுஎன்டிபி, ஆக்ஸ்ஃபோர்டு வறுமை, மனித மேம்பாட்டுத் திட்ட ஆய்வு நிலையம் ஆகியவை கணக்கிட்டுள்ளன.

அந்த அதிகரிப்பு உலகிற்கு ஒரு விழிப்புணர்வு அழைப்பாக இருக்க வேண்டும் என்று யுஎன்டிபி நிர்வாகி அலெக்சாண்டர் டி க்ரூ கூறினார்.

“இந்த எண்களுக்குப் பின்னால் பசி, பள்ளிப் படிப்பை இழத்தல், சுத்தமான குடிநீர் அல்லது மின்சாரப் பற்றாக்குறை போன்ற இன்னல்களை எதிர்கொள்ளும் 1.2 பில்லியன் பேர் உள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று அவர் செய்தி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கடும் வறுமையில் இருந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள்.

இருப்பினும், பதிவான அந்த அதிகரிப்பிற்கு மக்கள்தொகை வளர்ச்சியே முக்கியக் காரணம் என்றும் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள 108 வளர்ந்துவரும் நாடுகளில் 13 நாடுகளுக்கு மட்டுமே புதிய தரவுகள் கிடைத்துள்ளன என்றும் யுஎன்டிபி கூறியது.

வறுமையில் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கை அதிகரித்துள்ளபோதிலும், அந்த அறிக்கையின் வறுமைக் குறியீட்டின்படி, கடந்த 15 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 33 நாடுகள் தங்கள் நாட்டில் வறுமையில் வாழும் மக்களின் விழுக்காட்டைப் பாதியாகக் குறைத்துள்ளன.

அவற்றில் சஹாரா ஆப்பிரிக்க வட்டாரத்தைச் சேர்ந்த ஆறு நாடுகளும் அடங்கும். மிகவும் விரைவான முன்னேற்றத்தை அடைந்த நாடுகளில் ஆசியாவைச் சேர்ந்த சீனாவும் வியட்னாமும் முன்னணியில் உள்ளதாக யுஎன்டிபி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
வறுமைகுறியீடுஅறிக்கை