உலக அளவில் இளையரிடையே வேலையின்மை அதிகரிப்பு: ஐநா

உலக அளவில் இளையரிடையே வேலையின்மை அதிகரிப்பு: ஐநா

2 mins read
638fad22-d558-4020-bb13-d9b882c4377d
இளையர்களிடையே வேலையின்மை அதிகரிப்பும் போதிய பொருளியல் வாய்ப்பின்மையும் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் இந்தியாவில் இளையர்கள் நடத்திய போராட்டங்களுக்கு முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ஜெனீவா: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வேலைவாய்ப்புச் சந்தையை மாற்றத் தொடங்கியுள்ள நிலையில், 2025ஆம் ஆண்டில் உலக அளவில் இளையர் வேலையின்மை விகிதம் கூடியதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா) தெரிவித்துள்ளது.

குறிப்பாக, அதிக வருவாய் ஈட்டும் சில நாடுகளில் அவ்விகிதம் அதிகமாக இருந்தது.

கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு இளையர் வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்பட்ட தற்காலிக முன்னேற்றம் தற்போது நிலைகுத்திப் போயுள்ளதாக ஐநாவின் அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கையின்படி, 2024ல் 2.3 விழுக்காடாக இருந்த உலகளாவிய இளையர் வேலையின்மை விகிதம் 2025ல் 12.4 விழுக்காடாக உயர்ந்தது. இது 15 முதல் 25 வயதுக்குட்பட்ட 67 மில்லியன் இளையர்கள் வேலையின்றி இருப்பதற்குச் சமமாகும்.

அதேவேளையில், வேலை, கல்வி அல்லது பயிற்சியில் ஈடுபடாத இளையர்களின் விகிதமும் லேசாக உயர்ந்து, 20 விழுக்காட்டை எட்டியுள்ளது. இது 257 மில்லியனுக்கும் மேற்பட்ட இளையர்களைப் பாதித்துள்ளதாக அந்த அமைப்பு தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“மந்தமான பொருளியல் வளர்ச்சி, குறைந்த அளவிலான வேலைவாய்ப்பு உருவாக்கம், புவிசார் அரசியல் பதற்றங்கள், விரைவான தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவை இணைந்து, இளையர்கள் படித்து முடித்து நல்ல வேலைக்குச் செல்வதில் அதிகச் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றன,” என்று அவ்வறிக்கை விளக்கியுள்ளது.

2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளிலும் இளையர் வேலையின்மை விகிதம் மாற்றமின்றி 12.3 விழுக்காடாக நிலைத்திருக்கும் என்று, ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஐஎல்ஓ தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவால் கவலை

வேலைவாய்ப்புச் சந்தையில் ‘ஏஐ’ ஏற்படுத்தும் தாக்கம் குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லாததால் இளையர்களிடையே கவலை அதிகரித்துள்ளதாக ஐஎல்ஓ அறிக்கை தெரிவிக்கிறது.

தங்களின் வேலைகள் தொழில்நுட்பத்தால் மாற்றமடையலாம் என்றும் வேலை மற்றும் வருமான உறுதிப்பாட்டிற்கான வாய்ப்புகள் தொழில்நுட்பக் காரணங்களால் தடுக்கப்படலாம் என்றும் இளையர்கள் அஞ்சுகின்றனர்.

இந்நிலையில், “நிலையற்ற உலகப் பொருளியல் சூழலில், செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புடைய புதிய அபாயங்கள் உருவாகி வருகின்றன. அவை இளையர்களுக்குச் சாதகமானவை அல்ல,” என்று ஐஎல்ஓ அமைப்பின் வேலைவாய்ப்பு, திறன்கள், நீடித்து நிலைக்கத்தக்க நிறுவனங்கள் பிரிவின் இயக்குநர் சுக்தி தாஸ்குப்தா செய்தியாளர்களிடம் கூறினார்.

‘ஏஐ’ வளர்ச்சிக்கும் இளையர்களிடையே வேலையின்மை அதிகரிப்பிற்கும் இடையிலான நேரடித் தொடர்பைப் பற்றி இப்போதே உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் அவர் சொன்னார்.

வட்டார அளவில் பார்க்கையில், வடஆப்பிரிக்கா, வடஅமெரிக்கா மற்றும் வடக்கு, தெற்கு, மேற்கு ஐரோப்பாவில் இளையர் வேலையின்மை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
இளையர்வேலைவாய்ப்புஐநாஉலகம்