உலக பதற்றநிலை: கடற்படை ஹெலிகாப்டர்களை மாற்றும் நியூசிலாந்து

1 mins read
01246212-9d95-4108-9ab3-d9920b1c1483
நியூசிர்ந்து தற்காப்பு அமைச்சர் ஜூடித் கோலின்ஸ். - கோப்புப் படம்: இபிஏ

வெல்லிங்டன்: நியூசிலாந்து அதன் பழைய கடற்படை ஹெலிகாப்டர்களை மாற்றுவதற்கான 1.2 பில்லியன் டாலர் (1.56 பில்லியன் வெள்ளி) திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (மே 4) அறிவித்தது.

தற்காப்புச் செலவை அதிகரிப்பதில் அரசாங்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறது; அதன்கீழ் அரசாங்கம் முதன்முறையாக இதற்கு நிதி ஒதுக்குவதாக நியூசிலாந்து தற்காப்பு அமைச்சர் ஜூடித் கோலின்ஸ் கூறியுள்ளார்.

உலகளவில் பதற்றநிலை அதிகரித்துவரும் நிலையில் நியூசிலாந்து அதன் தற்காப்பு அம்சங்களைப் பெரிய அளவில் மாற்றி வருகிறது. அதன் ஓர் அங்கமாக கடற்படை ஹெலிகாப்டர்களை மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்து, 10 ஆண்டுகளில் தற்காப்பு அம்சங்களில் கூடுதலாக ஐந்து பில்லியன் டாலர் செலவிடும் திட்டத்தைக் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. அதன்படி ஏவுகணைகள், இணையப் பாதுகாப்பு, வானூர்திகள் ஆகியவற்றுக்குச் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்காப்புச் செலவினம் இரண்டு விழுக்காட்டுக்கு அதிகரிக்கும். அது, முன்னதாக ஒரு விழுக்காடாக இருந்தது.

புதிய ஹெலகாப்டர்கள், தற்காப்பு ஆற்றல் மட்டுமின்றி தாக்குதலை நடத்துவதற்கான ஆற்றலையும் மேம்படுத்தும் என்றார் திருவாட்டி கோலின்ஸ். தற்காப்புப் படைகளை நிறுத்துவது, பயிற்சி, உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு நான்காண்டுகளில் 570 மில்லியன் டாலர் ஒதுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்