வாஷிங்டன்: உலகளவில் அழிந்த வெப்பமண்டலக் காடுகளின் எண்ணிக்கைக் கடந்த ஆண்டு சரிந்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட உலக வளக் கழக ஆய்வுப் பிரிவும் மேரிலேன்ட் பல்கலைக்கழகமும் ஆய்வை மேற்கொண்டன.
கடுமையான காட்டுத் தீச் சம்பவங்களால் டென்மார்க் நாட்டுக்கு ஈடான பரப்பளவில் உள்ள வெப்பமண்டலக் காடுகள் கடந்த ஆண்டு அழிந்ததாக ஆய்வு சுட்டியது. எனினும், 2024ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, கடந்த ஆண்டு குறைவான காடுகள் அழிந்தன.
2024ஆம் ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவில் 6.7 மில்லியன் ஹெக்டர் பரப்பளவிலான வெப்பமண்டலக் காடுகள் நாசமாகின. கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 36 விழுக்காடு குறைந்தது. கடந்த ஆண்டு, ஏறக்குறைய 4.3 மில்லியன் ஹெக்டர் பரப்பளவிலான வெப்பமண்டலக் காடுகள் உலகளவில் அழிந்தன.
ஒவ்வொரு நிமிடமும் 11 காற்பந்தாட்டத் திடல்களுக்குச் சமமான வெப்பமண்டலக் காடுகள் கடந்த ஆண்டு காணாமற்போனதாகக் காடுகளைக் கண்காணிக்கும் அனைத்துலக அமைப்பு அதன் வருடாந்தர அறிக்கையில் கூறியது.
மரங்களை வெட்டுவது, காட்டுத் தீச் சம்பவங்கள், வெள்ளம் போன்ற பேரிடர்கள், பாதை மாறும் ஆறுகள் ஆகியவற்றால் காடுகள் அழிவதாக அறிக்கை குறிப்பிட்டது.
பிரேசிலில் கடந்த ஆண்டு 1.6 மில்லியன் ஹெக்டர் பரப்பளவிலான காடுகள் அழிந்தன. அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்புநோக்க, கடந்த ஆண்டு அழிந்த காடுகளின் எண்ணிக்கை 42 விழுக்காடு குறைந்தது. அதற்குப் பிரேசிலில் உள்ள வலுவான சுற்றுப்புறக் கொள்கைகள் முக்கிய பங்காற்றின.
மாறாக, இந்தோனீசியாவில் அழிந்த காடுகளின் என்ணிக்கை 14 விழுக்காடு கூடியது. கடந்த ஆண்டு ஏறக்குறைய 300,000 ஹெக்டர் காடுகள் அங்கு அழிந்துபோயின. அது சிங்கப்பூரைவிட நான்கு மடங்குக் கூடுதலான பரப்பளவு.
மலேசியா, கடந்த ஆண்டு 65,000 ஹெக்டர் காடுகளை இழந்தது. அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்புநோக்க, அது 5 விழுக்காடு குறைவு.
தொடர்புடைய செய்திகள்
இனிவரும் மாதங்களில் எல் நினோ பருவம் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுவதால் காட்டுத் தீ ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.


