அரசாங்க வருமான நிலுவைத் தொகையை மீட்பதே இலக்கு: ஆண்டனி லோக்

அரசாங்க வருமான நிலுவைத் தொகையை மீட்பதே இலக்கு: ஆண்டனி லோக்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

05 Oct 2026 - 4:58 pm

2 mins read

புத்ராஜெயா: மைஇஜி மற்றும் ஸெட்ரிக்ஸ் அல் பெர்ஹாட் ஆகிய நிறுவனங்களின் சேவைகளை இடைநிறுத்தம் செய்வதாக எடுக்கப்பட்ட முடிவுக்கும் அவற்றுக்கு ஏதேனும் அரசியல் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுவதற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெளிவுபடுத்தியுள்ளார்.

அரசாங்கத்துக்குச் சேர வேண்டிய 314 மில்லியன் ரிங்கிட் நிலுவைத் தொகையை மீட்பதே தமது அமைச்சின் முதன்மை நோக்கமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அந்நிறுவனங்களுக்கு அம்னோ கட்சியுடன் தொடர்பு உள்ளதா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் லோக், எந்தவொரு நிறுவனத்தையும் குறிப்பிட்ட அரசியல் கட்சியோடு தொடர்புபடுத்துவது தமது வேலை அல்ல என்றும் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அனைத்து நிறுவனங்களும் முகவர்களும் சமமாகவே நடத்தப்படுவதாகவும் கூறினார்.

முன்னதாக, ஸெட்ரிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான நோரேசா முகம்மது முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினராகவும் செனட்டராகவும் இருந்தவர் என்பதைச் சுட்டிக்காட்டி, அந்நிறுவனத்துக்கு முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் வலுவான தொடர்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

சாலைப் போக்குவரத்துத் துறையின்சார்பில் வசூலிக்கப்பட்ட அரசாங்க வருவாயைச் செலுத்த வேண்டிய கடமையின் அடிப்படையிலேயே அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாக அமைச்சர் லோக் விளக்கமளித்தார்.

மைஇஜி, ஸெட்ரிக்ஸ் ஆகியவற்றின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் சிலர் தமது பதவி விலகலைக் கோரி வருவதையும் அவர் கடுமையாகச் சாடினார்.

“நடவடிக்கை எடுத்தவுடன், சிலர் உடனே நான் பதவி விலக வேண்டும் என்கிறார்கள். பணத்தைச் செலுத்தாத நிறுவனம் பொறுப்பேற்கக் கேட்கப்படவில்லை. ஆனால் நடவடிக்கை எடுத்த அமைச்சரை விலகச் சொல்கிறார்கள். இது என்ன மாதிரியான விவாதம்?” என்று அமைச்சர் லோக் கேள்வி எழுப்பினார்.

நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்துமாறு அந்த நிறுவனங்களை அமைச்சர் லோக் கேட்டுக்கொண்டார். அந்தப் பணம் நிறுவனங்களுக்குச் சொந்தமானது அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபோக்குவரத்துஅமைச்சர்