தங்க விலை சரிவு, டாலர் மதிப்பு ஏற்றம்

அமெரிக்க டாலரின் மதிப்பு இரு வாரங்களில் அதிக ஏற்றம்

தங்க விலை சரிவு, டாலர் மதிப்பு ஏற்றம்

2 mins read
6d17b308-ff23-4411-9110-f7ac32591d2d
கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது; தங்கத்தின் விலை இறங்கியது. - கோப்புப் படம்: எஸ்பிஎச் மீடியா

வாஷிங்டன்: அனைத்துலகச் சந்தையில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) தங்கத்தின் விலை சரிவைக் கண்டது.

வட்டி விகிதங்கள் உயரும் சூழலில், முதலீட்டாளர்கள் வட்டி வருமானம் தராத தங்கத்தில் முதலீடு செய்வதைக் குறைத்துக்கொள்வதால், தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 0.3 விழுக்காடு சரிந்து, 4,285.91 அமெரிக்க டாலராகப் பதிவானது.

அனைத்துலகப் பொருளியல், அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலகப் பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை 0.25 விழுக்காடுவரை உயர்த்தக்கூடும் என்று நிதிச் சந்தைகள் கணித்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கப் பயனீட்டாளர் விலைக்குறியீடு அதிகரித்ததும், ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 107 டாலரை எட்டியதும் இந்த விலையேற்றத்துக்கு முக்கியக் காரணங்கள்.

அதேவேளையில், கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் அமெரிக்க டாலரின் மதிப்பு இரு வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வட்டி விகித உயர்வு குறித்த கணிப்புகள் டாலரின் மதிப்பை வலுப்படுத்தியுள்ளன.

யூரோ, பவுண்டு ஆகிய நாணயங்களுக்கு எதிராக டாலர் மதிப்பு சற்று உயர்வைக் கண்டுள்ள வேளையில், ஜப்பானிய யென் மதிப்பும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை ஜப்பான் மத்திய வங்கியும் தனது வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வளர்ச்சியை மெதுவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்தன.

அதனால், முதலீட்டாளர்கள் டாலரை நோக்கி நகர்ந்தாக ஓசிபிசி வங்கியின் நாணயப் பரிவர்த்தனைப் பகுப்பாய்வாளர் கிறிஸ்டஃபர் வோங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்உலகம்டாலர்அமெரிக்காதங்கம்ஏற்றம்