சிட்னி: முதலீட்டாளர்கள் பல ஆண்டுகள் காணப்படாத அளவில் தங்கத்தையும் வெள்ளியையும் விற்றனர்.
மதிப்புமிக்க உலோகங்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்திருந்தது. அவற்றின் விலை அளவுக்கதிகமாக உயர்ந்துவிட்டது என்ற அச்சத்தில் தக்க நேரத்தில் லாபம் ஈட்ட முதலீட்டாளர்கள் அவற்றை அதிக அளவில் விற்றனர்.
தங்க விலை, 12 ஆண்டுகளுக்கும் மேல் இல்லாத அளவில் 6.3 விழுக்காடு வரை சரிந்தது. அதேபோல், வெள்ளி விலையும் 8.7 விழுக்காடு வரை சரிந்தது.
விலை ஐந்து விழுக்காட்டுக்கும் மேல் குறைவது அரிது என்று சில முதலீட்டாளர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டு நடவடிக்கை இடம்பெறும் நூறாயிரக்கணக்கான நாள்களில் ஒருமுறை இவ்வாறு நிகழும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
நியூயார்க்கில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) மாலை 4.59 மணி நிலவரப்படி தங்க விலை 5.3 விழுக்காடு குறைந்து அவுன்சுக்கு 4,125.22 டாலராக (5,354.89 வெள்ளி) சரிந்தது. வெள்ளி விலை, 7.1 விழுக்காடு சரிந்து அவுன்சுக்கு 48.71 டாலராகப் பதிவானது.
கடந்த வாரம் தங்க, வெள்ளி விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்தது. இப்போது இந்த விலை வீழ்ச்சி, அந்தப் போக்கை திடீரென முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
பிளாட்டினம், பெலேடியம் ஆகியவற்றின் விலையும் குறைந்தது. அவ்விரு உலோகங்களின் விலையும் செவ்வாய்க்கிழமை ஐந்து விழுக்காட்டுக்கும் மேல் சரிந்தது.
தங்க விலை தொடர்ந்து ஒன்பது வாரங்களாகக் கூடி வந்தது. அதன் விலை இன்னமும் முன்பைவிட இவ்வாண்டு 55 விழுக்காடு அதிகமாக இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
வட்டார அளவில் நாடுகளுக்கிடையே நிலவும் அரசியல் ரீதியான பதற்றமும் வர்த்தகப் பதற்றமும் அதிக மதிப்புமிக்க உலோகங்களுக்கான தேவை அதிகம் இருந்து வருவதற்கான காரணமாகும்.
அமெரிக்க மத்திய வங்கி இவ்வாண்டிறுதி வரை பெரிய அளவில் வட்டி விகிதத்தைக் குறைக்கக்கூடும் என்று பேசப்படுவதும் தங்க விலை சரிந்ததற்கு ஒரு முக்கியக் காரணம்.

