தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தைப்பூசம் 2024: பினாங்கில் ஒன்றாக வலம் வரவிருக்கும் தங்க, வெள்ளி ரதங்கள்

1 mins read
90d16bb1-2ae7-4abc-b7fe-7f1d84fde68f
தங்க ரத ஊர்வலமும் வெள்ளி ரத ஊர்வலமும். - படங்கள்: தி ஸ்டார்

ஜார்ஜ்டவுன்: அடுத்த ஆண்டு தைப்பூசத் திருநாள் கொண்டாட்டத்தின்போது, தங்க ரதமும் வெள்ளி ரதமும் ஒன்றாக வலம் வரும் என்று பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியத் தலைவர் ஆர் எஸ் என் ராயர் தெரிவித்துள்ளார்.

வாரியத்திற்கும் தண்ணீர்மலை நாட்டுக்கோட்டைச் செட்டியார் கோவில் அறங்காவல் குழுவிற்கும் இடையே இணக்கமான உறவு நிலவுவதாகத் திரு ராயர் குறிப்பிட்டார்.

“வாரியத்தின் தலைவராக நான் பொறுப்பேற்றதிலிருந்து கோவில் அறங்காவல் குழுவினருடன் மிக அணுக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறோம். ரத ஊர்வல ஒத்துழைப்புத் தொடர்பில் அவர்களுடன் பல சந்திப்புகளை நடத்தியுள்ளோம்.

“தங்க ரதம் ஊர்வலத்தை ரத்து செய்ய நாங்கள் திட்டமிடவில்லை. அப்படி வெளியான செய்திகள் வதந்தியே” என்று திரு ராயர் சொன்னார்.

ஒரே ரத ஊர்வலத்தை வைத்துக்கொள்ளலாம் என்று நாட்டுக்கோட்டை கோவில் நிர்வாகக் குழுத் தலைவர் டாக்டர் ஏ. நாராயணன் முன்மொழிந்திருந்த நிலையில், திரு ராயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு பிப்ரவரி 4ஆம் தேதி ரத ஊர்வலம் இடம்பெற்றது.காலை 6.30 மணிக்கு குவீன் ஸ்திரீட்டில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலிலிருந்து தங்க ரதம் புறப்பட்டது. காலை 7.50 மணிக்கு பினாங்கு ஸ்திரீட்டில் உள்ள ‘கோவில் வீட்டில்’ இருந்து வெள்ளி ரதம் கிளம்பியது.

வரும் 2024ஆம் ஆண்டில் ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படவுள்ளது.

குறிப்புச் சொற்கள்