கொள்கை அளவிலான ஒப்பந்தத்துடன் 1எம்டிபி மோசடி வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்த கோல்ட்மன் சாக்ஸ்

கொள்கை அளவிலான ஒப்பந்தத்துடன் 1எம்டிபி மோசடி வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்த கோல்ட்மன் சாக்ஸ்

2 mins read
18868582-d0fe-4033-838d-faba206a801d
அமெரிக்க நீதித்துறை மற்றும் பிற அதிகாரிகளின் 1எம்டிபி விசாரணைகளை முடித்துக்கொள்வதற்காக, 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் அபராதமாகச் செலுத்தவும் அதன் மலேசியப் பிரிவு செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் கடந்த 2020ஆம் ஆண்டில் கோல்ட்மன் சம்மதித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: ஊழல் மோசடியில் சிக்கிய மலேசிய இறையாண்மை சொத்து நிதியமான 1எம்டிபிக்கு ஆற்றிய பணிகள் குறித்து பங்குதாரர்களை ஏமாற்றியதாக, வால் ஸ்ட்ரீட் வங்கியான கோல்ட்மன் சாக்ஸ் மீது தொடரப்பட்ட ஒரு வழக்கை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள அந்த வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.

மேன்ஹாட்டன் கூட்டரசு நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட ஒரு கடிதத்தில், இந்த வழக்கை சுமுகமாகத் தீர்ப்பதற்கான கொள்கை அளவிலான ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாகவும் மே 20ஆம் தேதிக்குள் முதற்கட்ட ஒப்புதலுக்காக இந்தத் தீர்வைச் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கோல்ட்மன் மற்றும் பங்குதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

கோல்ட்மன் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது. ஸ்வீடனின் ஓய்வூதிய நிதியமான ஷ்ஜுண்டே ஏபி-ஃபோண்டன் தலைமையிலான பங்குதாரர்களின் வழக்கறிஞர்கள், கருத்து கேட்புகளுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் குறித்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

தற்போது தலைமறைவாக இருக்கும் மலேசிய நிதியாளர் ஜோ லோவின் உதவியுடன் பொருளியல் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காக முன்னாள் மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் 1எம்டிபியை நிறுவினார்.

1எம்டிபியிலிருந்து 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் சுருட்டப்பட்டதாகவும் அவற்றில் சில ஜோ லோவுடன் தொடர்புடைய வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மற்றும் போலி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் அமெரிக்க மற்றும் மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1எம்டிபிக்கு 6.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பத்திரங்களை விற்க கோல்ட்மன் உதவியதுடன் கிட்டத்தட்ட 600 மில்லியன் அமெரிக்க டாலர் கட்டணமாக வசூலித்துள்ளது. தமது வலுவான இடர் நிர்வாகத்தை தொடர்ந்து முன்னிலைப்படுத்திக் காட்டிய அதே வேளையில், இந்த மோசடியில் தங்களுக்கு உள்ள பங்கு குறித்து வங்கி பொய் சொன்னதாகப் பங்குதாரர்கள் அதன் மீது குற்றம் சாட்டினர்.

இந்த மோசடிக்கு கோல்ட்மன் தீவிரமாக உதவியது மட்டுமன்றி, அதிலிருந்து பேரளவில் லாபமும் ஈட்டியுள்ளது என்பதை முதலீட்டாளர்கள் உணர்ந்த பிறகு, வங்கியின் பங்கு விலை சரிந்ததாக அவர்கள் கூறினர்.

அமெரிக்க நீதித்துறை மற்றும் பிற அதிகாரிகளின் 1எம்டிபி விசாரணைகளை முடித்துக்கொள்வதற்காக, 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் அபராதமாகச் செலுத்தவும் அதன் மலேசியப் பிரிவு செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் கடந்த 2020ஆம் ஆண்டில் கோல்ட்மன் சம்மதித்தது.

வங்கி மூன்று கால ‘ஒத்திவைக்கப்பட்ட வழக்கு விசாரணை ஒப்பந்தத்தை’ வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள நீதிபதி ஒருவர், கோல்ட்மனுக்கு எதிரான அமெரிக்க குற்றவியல் வழக்கை மே 2024ல் அதிகாரபூர்வமாக முடித்து வைத்தார்.

1எம்டிபியைக் கொள்ளையடிக்க உதவிய கோல்ட்மன் வங்கியாளர் ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார், மற்றொருவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்