வாஷிங்டன்: ஈரானுடன் பேச்சுவார்த்தைமூலம் அமைதி உடன்பாட்டை எட்ட நல்ல வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இருதரப்பிலும் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏற்படுத்திய முற்றுகையால் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் 13 இரவுகளாக வான்வழித் தாக்குதல்களை நடத்தின. கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய போர், வளைகுடா வட்டாரத்திலும் உலகப் பொருளியலிலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய அமைதி முயற்சிகள் தோல்வி அடைந்தால் மீண்டும் தாக்குதல்கள் தொடங்கும் என்று திங்கட்கிழமை (ஜூலை 27) எச்சரித்த திரு டிரம்ப், அமெரிக்காவிடம் போதிய அளவு ஆயுதக் கையிருப்பு உள்ளதாகக் கூறினார்.
இவ்வேளையில், அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை எதுவுமில்லை என்றும் சமரசப் பேச்சாளர்கள் மூலமே செய்திகள் பரிமாறப்படுகின்றன என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் இஸ்மாயில் பாக்காய் தெரிவித்தார். அமெரிக்காவின் நடவடிக்கையை மாஃபியா கும்பலின் செயல்பாட்டுடன் அவர் ஒப்பிட்டார்.
இதனிடையே, சவூதி அரேபியாவின் எண்ணெய் ஆலைகளைக் குறிவைத்து ஈராக்கிலுள்ள ஈரான் ஆதரவுக் குழுக்கள் ஏவிய ஆளில்லா வானூர்திகளைத் தடுத்து நிறுத்தியதாகச் சவூதி தற்காப்பு அமைச்சு கூறியுள்ளது. ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களும் சவூதிமீது வானூர்தித் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவித்தனர். இஸ்ரேலிய ராணுவமும் ஜோர்தான் எல்லை அருகே இரண்டு வானூர்திகளை இடைமறித்து அழித்தது.
தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து உலகப் பங்குச்சந்தைகள் ஏற்றமடைந்தன. அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் பீப்பாய்க்கு 6 விழுக்காடு சரிந்து US$86ஆகக் (S$111) குறைந்தது.
இதனிடையே, எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வது குறித்து ஓமானுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஈரானின் புரட்சிக் காவற்படையினர் அண்மைய நாள்களில் அப்பகுதியில் செல்ல முயன்ற வணிகக் கப்பல்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

