துபாய்: சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் முதல் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இரு தரப்பையும் சார்ந்த முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பேச்சுவார்த்தைக்கு முன்னர் லெபனான்மீது நடத்தும் தாக்குதலைக் கண்டித்து ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது.
அதன்பிறகு லெபானில் செயல்படும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு உதவிசெய்தால் ஈரான்மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
இதுபோன்ற காரணங்களால் பேச்சுவார்த்தை என்ன ஆகும் என்ற நிலையில் இரு நாடுகளும் அமைதி உடன்பாட்டை எட்டச் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உறுதுணையாக இருக்கும் கத்தார், பாகிஸ்தான் இரண்டும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவும் ஈரானும் 60 நாள்களில் அமைதி உடன்பாட்டை எட்டச் சம்மதம் தெரிவித்துள்ளன. அதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அமைதி உடன்பாடு குறித்த மற்ற அம்சங்கள் தொடர்பான பேச்சுகள் இவ்வாரம் முழுவதும் சுவிட்சர்லாந்தில் நடக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
லெபனானில் நடக்கும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வரவும் ஹோர்முஸ் நீரிணையில் சீராகக் கப்பல்கள் போக்குவரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஈரானிய அதிகாரிகளுடன் சனிக்கிழமை (ஜூன் 21) பேசினார். அப்போது குறைந்தது 60 நாள்களுக்குச் சண்டை நிறுத்தம் வேண்டும் என்று பேசப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சனிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. அதில் முன்னேற்றம் ஏற்பட்டதால் இப்போது பேச்சுவார்த்தை அடுத்தகட்டத்திற்கு முன்னேறியுள்ளது.
பேச்சுவார்த்தை குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டுள்ளார்.
“ஈரான்மீதான எண்ணெய், பெட்ரோலியப் பொருள்களுக்கான ஏற்றுமதித் தடைகள் பல நீக்கப்பட்டுள்ளன, முடக்கப்பட்ட சொத்துகள் சில விடுவிக்கப்பட்டுள்ளன, ஈரான் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
பேச்சுவார்த்தை தொடர்பாக வெள்ளை மாளிகை எந்த ஒரு கருத்தையும் உடனடியாக வெளியிடவில்லை.
கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கில் வெடித்த போர் காரணமாக உலகப் பொருளியல் பாதிக்கப்பட்டது. தற்போது பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் பல நாடுகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.
இதற்கிடையே எண்ணெய் விலை இறக்கம் கண்டுள்ளது. திங்கட்கிழமை காலை ஒரு பீப்பாய் விலை 2.2 விழுக்காடு குறைந்து 78.94 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமானது.

