ஆந்திரப் பிரதேசத்தில் உருவாகும் கூகல் தரவு நிலையம் சிக்கலை எதிர்நோக்குகிறது

ஆந்திரப் பிரதேசத்தில் உருவாகும் கூகல் தரவு நிலையம் சிக்கலை எதிர்நோக்குகிறது

2 mins read
f77ab1f3-ebea-4906-8a5b-da65b2318f63
நீர் ஆதாரங்கள், வனவிலங்குகளுக்கு ஏற்படும் அபாயங்களைக் கருத்தில் கொள்ளாமல் திட்டம் அவசர அவசரமாக விரைவுபடுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தென் மாநிலமான ஆந்திரப் பிரதேசம் மறுத்துள்ளது.  - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

விசாகப்பட்டினம்: கூகல் திட்டமிட்டுள்ள இந்தியத் தரவு நிலைய வளாகத்தைக் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதற்காக அந்த இடத்தில் உள்ள மலைப்பகுதி செம்மண்ணாகத் தோண்டப்பட்டுப் படிக்கட்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.

ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்து அதிகரித்துவரும் எதிர்ப்பு, அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமான கூகலின் 15 பில்லியன் அமெரிக்க டாலர் திட்டத்திற்குத் தடைகளை உருவாக்கி வருகிறது.

நீர் ஆதாரங்கள், வனவிலங்குகளுக்கு ஏற்படும் அபாயங்களைக் கருத்தில் கொள்ளாமல் திட்டம் அவசர அவசரமாக விரைவுபடுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தென் மாநிலமான ஆந்திரப் பிரதேசம் மறுத்துள்ளது. 

இந்த அதிநவீனத் தரவு நிலையத் திட்டம், அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரங்களைப் பெருமளவில் பயன்படுத்தக்கூடும் எனச் சுற்றுப்புற ஆர்வலர்கள் ஏற்கெனவே கவலை தெரிவித்தனர்.

மேலும், இத்திட்டம் கட்டப்படவிருக்கும் நிலப்பகுதி அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனவிலங்குச் சரணாலயத்திற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

அண்மை வாரங்களில், விசாகப்பட்டினத்தில் ஆர்வலர்களும் குழந்தைகளும் ‘நாங்கள் தரவுகளை அருந்தமுடியாது’ என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடியும் கூகல் சின்னத்தில் விலங்குகளை வரைந்தும் பேரணி நடத்தியதைச் சமூக வலைத்தளப் பதிவுகள் காட்டுகின்றன.

எனினும், இத்திட்டம் சட்டத்திற்கு உட்பட்டே மேற்கொள்ளப்படும் என்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தும் முழுமையாகப் பின்பற்றப்படும் என்றும் கூகுல் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

“மக்களின் வாழ்வாதாரத்தைப் பணயம் வைத்து வளர்ச்சி அமையக்கூடாது,” என்று கிரீன் விசாகா எனும் லாப நோக்கமற்ற அமைப்பின் நிறுவனர் ராஜா ராம மோகன் ராய் கூறுகிறார்.

நகரத்திற்கு அன்றாடம் 480 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதன் நீர்த்தேக்கங்கள், நதிகளிலிருந்து நாளொன்றுக்கு 410 மில்லியன் லிட்டர் நீர் மட்டுமே கிடைப்பதாக அரசாங்கம் கூறுகிறது. 2.5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நகரத்தில் குடிநீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்தி வழங்குவது வழக்கமான ஒன்று என்று அது தெரிவித்தது.

தரவு நிலையங்களுக்கு எதிர்ப்பு

சேவையகங்களைக் குளிர்விக்க அதிக அளவிலான நீரையும் மின்சாரத்தையும் பயன்படுத்துவதால், உலகெங்கிலும் வேகமாக அமைக்கப்படும் தரவுநிலையங்கள் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகின்றன.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதன் உத்தேசத் தாக்கம் இன்னும் அதிகமாகத் தெரிகிறது. அமெரிக்காவில், இதேபோன்ற அக்கறைகளை எழுப்பி, சென்ற மாதம் 42 மாநிலங்களில் 142 போராட்டங்களை எதிர்ப்பாளர்கள் நடத்தினர்.

குறிப்புச் சொற்கள்