வாஷிங்டன்: அமெரிக்கத் தற்காப்பு அமைச்சுடன் செய்யப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாது தவிர்க்கும்படி கூகல் நிறுவனத்தின் 600 ஊழியர்கள் அதன் நிர்வாகத்தை திங்கட்கிழமை (ஏப்ரல் 27) கேட்டுக்கொண்டனர். அந்த ஒப்பந்தப்படி, அமெரிக்க ராணுவத்தின் ரகசியமான செயல்பாடுகளில் கூகல் நிறுவன செயற்கை நுண்ணறிவுத் திறன் பயன்படுத்தப்படும்.
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சையின் கவனத்துக்கு கொண்டுசேர்க்க எழுதப்பட்ட அந்தக் கோரிக்கை கடிதத்தில் கூகல் டீப் மைன்ட், கிளவுட் உட்பட இதர பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.
கூகலின் தனிப்பட்ட பிரதான வடிவமைப்பான ஜெமினை ஏஐ செயல்பாட்டை அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு அதன் ரகசியத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவது குறித்து நிர்வாகத்தினருடன் சந்திப்புக்களை நடத்திவரும் நிலையில் ஊழியர்களின் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கையெழுத்திட்டோரில் 20 இயக்குநர்கள், மூத்த இயக்குநர்கள், துணைத் தலைவர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.
ஏஐ தொழில்நுட்பத்தை ஆரம்பத்தில் அமெரிக்க அரசாங்கத்துக்கு அறிமுகப்படுத்திய ‘அந்த்ரோபிக்’ என்ற புதிய நிறுவனம் அதனை விட்டு விலகிய பிறகு, பல நிறுவனங்கள் அந்தச் சேவையை வழங்க போட்டிபோட்டு வருகின்றன.

