சான் பிரான்சிஸ்கோ: கூகல் ஜெமினை கட்டமைப்பு இணையத்தைப் பயன்படுத்தி மற்ற நிறுவனங்களின் இணையத்தளங்களுக்குள் ஊடுருவியது தெரியவந்துள்ளது.
இணையப் பாதுகாப்புத்திறனைச் சோதித்தபோது கூகல் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ஜெமினை தன்னிச்சையாக அவ்வாறு செய்துள்ளது.
‘இர்ரெகுலர்’ என்ற தற்சார்பு நிறுவனம் மே மாதம் நடத்திய சோதனையின்போது அந்த ஊடுருவல்கள் இடம்பெற்றன.
சாதாரண மதிப்பீடு ஒன்றின்போது, இணையத்தில் பொதுவெளியில் உள்ள தகவல்களைக் கண்டறிந்த ஜெமினை, தனது சோதனைக்கு உட்பட்டவை என்று நினைத்து, அம்மூன்று இணையத்தளங்களை அணுகுவதற்கான மறைசொற்களைத் தோராயமாகக் கணித்தது என்று கூகலின் பாதுகாப்புப் பொறியியல் பிரிவின் துணைத் தலைவர் ஹீதர் அட்கின்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஒரு சம்பவத்தின்போது ஜெமினை தொழில்நுட்பம், பாதுகாக்கப்பட்ட கட்டமைப்புக்குள் நுழைய இயலும்வரை, மறைச்சொற்களைத் தொடர்ந்து கணித்துக்கொண்டே இருந்ததாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
மற்ற இரு சம்பவங்களில் பொதுப்படையான தரவுத்தளத்தில் இருந்த மறைச்சொற்களைக் கண்டறிந்து, அதன்மூலம் பாதுகாக்கப்பட்ட அமைப்புகளை ஜெமினை அணுகியதாக ‘தி வால் ஸ்திரீட் ஜர்னல்’ செய்தி தெரிவிக்கிறது.
மூன்று நிகழ்வுகளிலுமே உண்மையான நிறுவனங்களின் அமைப்புகளைத்தான் அணுகுகிறோம் என்பதை உணர்ந்தவுடன் ஜெமினை தனது ஊடுருவல் நடவடிக்கையை நிறுத்திவிட்டதாக அட்கின்ஸ் கூறினார்.
“பாதிக்கப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கும் இதுகுறித்துத் தெரிவிக்கப்பட்டுவிட்டது. மேலும், எங்களது பயிற்சிப் பங்காளியுடன் இணைந்து, அவர்களின் சோதனை முறைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொண்டுள்ளோம்,” என்றும் அவர் விளக்கினார்.
திறன்மிகு ஏஐ கட்டமைப்புகள் பொறுப்புணர்வுடன் செயல்படுவதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்தச் சம்பவங்கள் உணர்த்துவதாகவும் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
