வேலைக்கு ஆளெடுத்துக்கொண்டு இருந்தபோது, நேர்காணல் செய்தவரையே வேலையைவிட்டு நீக்கி அதிர்ச்சி அளித்துள்ளது கூகல் நிறுவனம்.
அண்மையில் கூகல் நிறுவனம் 12,000 பேரைப் பணிநீக்கம் செய்தது.
அப்படி எதிர்பாராத வேலையை இழந்தவர்கள், தாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விதம் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
கூகல் நிறுவனத்தின் மனிதவளப் பிரிவில் பணியாற்றி வந்தார் டேன் லனிகன் ரயன். அவர் தமது நிறுவனத்திற்கு ஆளெடுக்கும் பொருட்டு தொலைபேசிவழியாக ஒருவரை நேர்காணல் செய்துகொண்டிருந்தார். அப்போது, இடையிலேயே தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமது நிறுவன இணையத்தளத்தில் உள்நுழைய முயன்றபோது அவரால் முடியவில்லை. பின்னர் அவரது மின்னஞ்சலும் முடக்கப்பட்டது.
"அவ்வளவுதான்! எல்லாவற்றிலிருந்தும் நான் முடக்கப்பட்டேன். அடுத்த 10, 20 நிமிடங்களில் 12,000 பேரைப் பணிநீக்கம் செய்வதாக கூகல் அறிவித்தது," என்று விவரித்தார் ரயன்.
இதுகுறித்து தமது 'லிங்க்டுஇன்' பக்கத்திலும் விவரமாக எழுதியுள்ளார் ரயன். அதில் கூகல்தான் தமது கனவு நிறுவனம் எனக் குறிப்பிட்ட அவர், ஓராண்டுக்குமுன் தமது நாயுடன் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது கூகல் நிறுவனத்திலிருந்து பணிநியமனக் கடிதம் கிடைத்ததை நினைவுகூர்ந்தார். ஆனாலும், அவரது அந்த மகிழ்ச்சி ஓராண்டுடன் முடிவிற்கு வந்துவிட்டது.

