நூற்றுக்கணக்கான ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது கூகல்

1 mins read
b766ffa4-fd6d-4a1f-a56f-c32ddbfb7b92
அமெரிக்காவில் உள்ள கூகல் தலைமையகம். - படம்: விக்கிப்பீடியா

பெங்களூரு: ஆல்ஃபபெட் குழுமத்துக்குச் சொந்தமான கூகல் நிறுவனம், ஆன்ட்ராய்ட் மற்றும் பிக்ஸல் பிரிவுகளில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை வியாழக்கிழமை (ஏப்ரல் 10) ஆட்குறைப்பு செய்தது. ஆன்ட்ராய்ட் மென்பொருள், பிக்ஸல் கைப்பேசிகள், குரோம் இணைய உலாவியில் அவர்கள் வேலை செய்தனர்.

இந்த நிலவரம் குறித்து தகவலறிந்த ஒருவரை மேற்கோள்காட்டி தொழில்நுட்பச் செய்தித் தளமான ‘தி இன்ஃபர்மேஷன்’ வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

“கடந்த ஆண்டு பிளாட்ஃபார்ம்ஸ் மற்றும் டிவைசஸ் குழுக்களை ஒன்றிணைத்ததைத் தொடர்ந்து, இன்னும் வேகமாகவும் விவேகமாகவும் செயல்படுவதில் நாங்கள் கவனம் செலுத்தி வந்துள்ளோம். இதில் ஆட்குறைப்பு செய்வதும் அடங்கும்,” என கூகல் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

கூகல் அதன் ‘கிளவுட்’ பிரிவில் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ததாக புளூம்பெர்க் பிப்ரவரியில் தெரிவித்திருந்தது.

2023 ஜனவரியில், ஆல்ஃபபெட் குழுமம் 12,000 வேலைகளைக் குறைப்பதற்கான திட்டங்களை அறிவித்திருந்தது. அதன் உலகளாவிய ஊழியரணியில் இது 6 விழுக்காடாகும்.

குறிப்புச் சொற்கள்