யங்கூன்: மியன்மாரின் ராணுவ ஆட்சிக்குழு அக்டோபர் மாதத்தில் நாடளாவிய நிலையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தவிருக்கிறது.
அந்நாட்டு அரசாங்க ஊடகம் செப்டம்பர் 2ஆம் தேதி இதைத் தெரிவித்தது.
அக்டோபர் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராணுவ ஆட்சிக்குழுத் தலைவர் ஜெனரல் மின் ஆங் ஹிலைங் கூறியதாக அரசாங்க ஊடகம் தெரிவித்தது.
மியன்மாரில் அடுத்த ஆண்டு (2025) பொதுத் தேர்தலை நடத்த இந்தக் கணக்கெடுப்பின் தகவல்கள் பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, செப்டம்பர் 1ஆம் தேதி ஒளிபரப்பான தொலைக்காட்சி உரையில், “சரியான, துல்லியமான வாக்காளர் பட்டியலைத் தொகுக்க மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பயன்படும். சுதந்திரமான, நியாயமான முறையில் பல கட்சிகள் களமிறங்கும் ஜனநாயக முறையிலான பொதுத் தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதற்கான அடிப்படைத் தேவை அது,” என்று ஜெனரல் மின் ஆங் ஹிலைங் குறிப்பிட்டிருந்தார்.
மியன்மார் ஆட்சிக்குழு பரிந்துரைக்கும் தேர்தல் போலியானது என்று பரவலாக ஏளனம் செய்யப்படுகிறது. அந்தத் தேர்தல் முடிவுகளை மேலை நாடுகள் ஏற்றுக்கொள்ள மாட்டா எனக் கருதப்படுகிறது.
தேர்தலில் கலந்துகொள்ளப் பதிவு செய்யாததால் பல அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டுள்ளன. ராணுவ ஆட்சிக்குழுவால் ஆட்சிக் கவிழ்ப்புக்கு உள்ளான தேசிய ஜனநாயக லீக் கட்சியும் (என்எல்டி) அவற்றில் அடங்கும்.
ராணுவம், 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் திருவாட்டி ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்தது. இரண்டு மாதங்களுக்குமுன் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்ற அவரது கட்சி வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் வென்றதாக ராணுவம் சொன்னது.
தொடர்புடைய செய்திகள்
திருவாட்டி சூச்சி உட்படக் கட்சித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், ராணுவத்தின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தப்பியோடியவர்கள் கூறினர்.
ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து போராட்டங்கள் வெடித்தன. ராணுவம் அவற்றைக் கொடிய முறையில் ஒடுக்கியது.
ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு மியன்மாரில் உள்ள 55 மில்லியன் மக்கள் பேரளவில் இடர்ப்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.

